பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, அவரை மீண்டும் இம்மாதம் 18ஆம் திகதி தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு நீதவான் ஹேமந்த புஷ்பகுமார உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த 10ஆம் திகதி அனுமதி வழங்கியது.
விஜித் மலல்கொட மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில், வசந்தவை ஆஜர்படுத்தியதோடு, அவரை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தி முழுமையான அறிக்கையை வரவழைக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் முன்னிலையில் ஆஜர்படுத்தி தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்படி, வசந்த முதலிகே நேற்று மாலை தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.