ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், அதிகரிக்காவிட்டால் இருண்ட யுகத்திற்கு செல்வோம் எனவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின் கட்டண திருத்தம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்டாயமாக ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை மின்வெட்டுக்கு செல்வதன் மூலமே மின்கட்டண திருத்தத்தை நிறுத்த முடியும் என்று கூறிய அமைச்சர், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மின்கட்டணத்தை திருத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 56.90 ரூபா செலவிடப்படும் என ஊகிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் மின்சார சபை கோரிய திருத்தங்களுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த கால இழப்பை ஈடுகட்ட மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. 42,300 கோடி ரூபாய் மின்சார சபைக்கு வர வேண்டும். எரிபொருள் வாங்க பணம் கிடைக்காவிட்டால் மின்சார சபையை இயக்க முடியாது. அதனால்தான் மின் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. இன்று அனைவருக்கும் கடினமானது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஏழாயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் நான்காயிரம் கோடிகளை தனியார் சப்ளையர்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.