டிசம்பர் 06 மதவெறியர்களின் சூழ்ச்சியால் தரை மட்டமான பாபர் மஸ்ஜித்: 30 வருடங்களாகும் துயர சம்பவம்!

Date:

இந்தியாவில் தங்களது ஆட்சி அதிகாரம் நிலையாக நீடிக்க வேண்டுமெனில் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்து அவர்களிடையே மோதல்களை உருவாக்க வேண்டும் என்பதே ஆங்கிலெயர்களின் அன்றைய திட்டமாகும்.

அதில் உதித்த வஞ்சக சதிகள்தான் அயோத்தி விவாகரம் ஆகும்.

முகலாய பேரரசர் பாபர் அவர்கள் வட இந்தியாவில் , உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலை இடித்து விட்டு பாபர் மசூதியை கட்டினார் என்ற தவறான தகவலை வரலாற்று செய்தியாக அவர்கள் பதிவு செய்தனர்.

உண்மை என்ன?

பாபர் இந்தியாவுக்கு படை எடுத்தது 1526 ஆம் ஆண்டு.

அவர் மோதியது இப்ராகிம் லோடி என்ற முஸ்லிம் மன்னரோடுதான்.

அவருக்கு எதிராக படை எடுக்க பாபருக்கு அழைப்பு விடுத்தவர்கள் ராஜபுத்திர இந்து மன்னர்கள்தான்.

பாபருடன் பானிபட் என்ற இடத்தில் யுத்தம் செய்வதற்கு ஈராண்டுகளுக்கு முன்பே 1524 ல் அயோத்தியில் இப்ராகிம் லோடியால் அங்கு ஒரு பள்ளி அடித்தளமிடப்பட்டிருந்தது.

பாபரின் ஆட்சியின் போது பிற்காலத்தில் பாபரின் தளபதி மீர்பாகி என்பவர், அப்பள்ளியை முழுமைப்படுத்தி தனது மன்னர் பாபரின் பெயரை சூட்டியிருக்கிறார்.

இது நடந்தபோது ராமாயாணத்தை இந்தியில் எழுதிய துளசிதாசர் அயோத்தியில் வாழ்ந்துள்ளார்.

பாபரின் பேரன் மன்னர் அக்பர் காலம் வரை வாழ்ந்த அவர், தனது நூல்களில் அயோத்தியில் ராமர் கோயிலை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாக எங்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல,பாபர் ஒரு முறை கூட அயோத்திக்கு வருகை தந்ததில்லை. இது தான் வரலாறு.

ஆனால் ஆங்கிலெயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை அறியாத, உயர் சாதி வட்டத்தினர் இதை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்திய சுதந்திரத்திற்கு பின்பு, 1949 டிசம்பர் மாதம் பாபர் மசூதிக்குள் நள்ளிரவில் பலவந்தமாக ராமர் சிலை நுழைக்கப்பட்டது. அது சர்ச்சையானது. அதனால் பள்ளிவாசலும் பூட்டப்பட்டது.

பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்கு பிறகு, ராஜிவ் காந்தி பிரதமரானர். அப்போது மீண்டும் இப்பிரச்சனையை RSS பெரிது படுத்தியது.

அதன் அரசியல் பிரிவான பாரதீய ஜனதா கட்சி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் திட்டத்துடன் இதை வட இந்தியாவில் வாழும் பாமர இந்து மக்களிடம் முன்னெடுத்தது.

1989 ல் ஜனதா தளம் சார்பில் தேசிய முன்னணியின் கூட்டரசில் V.P. சிங் அவர்கள் பிரதமராக தேர்வானார்.

அப்போது பிற்படுத்தப்பட்ட இந்து சமுதாய மக்களுக்கு, நீதிபதி மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 27% இட ஒதுக்கீட்டை வழங்கினார்.

இதை உயர் சாதி வட்டத்தினர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் மக்கள் VP சிங்கின் பக்கமே திரண்டனர்.

உடனே அதை திசை திருப்பிடும் நோக்கில் காவி மதவாதிகள் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோயிலை கட்டுவோம் என முழங்கினர்.

அன்றைய பாஜக தலைவர் அத்வானி இதற்காக அயோத்தி நோக்கி ரத யாத்திரை நடத்தினார். வழியெங்கும் கலவரங்கள் நடந்தது. VP சிங்கின் ஆட்சியும் இவர்களது சூழ்ச்சியால் கவிழ்ந்தது.

பிறகு ராஜிவ் காந்தி படுகொலையானர். அப்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றது. PV நரசிம்மராவ் பிரதமரானார். இவர் முன்னாள் RSS காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தது. தலித் சமூகத்தை சேர்ந்த கல்யாண் சிங் முதல்வராக இருந்தார்.

1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கரசேவை நடைபெறும் என பாஜக அறிவித்தது.தங்கள் ஆதரவாளர்களை RSS திரட்டியது.

மதவெறி பிடித்த கூட்டம் திட்டமிட்டவாறு பாபர் மசூதியை இடித்து தள்ளியது.

இந்தியாவின் மதிப்பும், மாண்பும் உலக அளவில் சீர்குலைந்தது. நாடெங்கும் கலவரங்கள் வெடித்தது. முஸ்லிம்கள் பல இடங்களில் கொல்லப்பட்டனர். இந்திய வரலாறு ரத்தக் கரையானது.

அரசியல் சுழற்சியில் 2014 ஆம் ஆண்டு மீண்டும் முழு வலிமையோடு இந்திய அரசை பாஜக கைப்பற்றியது, அது இரண்டாம் முறையாகவும் தொடர்ந்தது.

இக்காலக்கட்டங்களில் நீதித்துறையில் அரசியல் தலையீடு உள்ளதா? என்ற விவாதங்களும் எழுந்தது.

நீதிமன்றங்களின் தனித்தன்மை பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளே டெல்லியில் போராடிய நிலையும் உருவானது. நீதிபதிகளே பத்திரிக்கையாளர்களிடம் புலம்பியதை உலகம் பார்த்தது.

இது போன்ற ஒரு சூழ்நிலையில்தான், உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி விவகாரத்தில் இறுதி தீர்ப்பை கூறியது.

அது தீர்ப்பை கூறியதா? நீதியை கூறியதா? என்ற கேள்விகள் இன்றும் தொடர்கிறது .

அந்த தீர்ப்பில் வரலாற்று ஆவணங்களுக்கு முன்னுரிமை தரவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.

முஸ்லிம் சமூகம் வஞ்சிக்கப்பட்டதாக இந்து சமூக மக்களே வருந்தினர். அனுதாபம் கூறினர். வலை தளங்களில் எழுதினர்.

அந்த தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட, மன்னர் பாபர் அயோத்தியில் ராமர் கோயிலை இடித்து விட்டுதான் பள்ளிவாசலை கட்டினார் என எங்கும் குறிப்பிடப்படவே இல்லை.

இது மிக முக்கியமான செய்தி மட்டுமல்ல… வரலாற்று அவதூறுகளுக்கான விடையும் கூட.

பொதுமக்கள் இதை துயரத்தோடு கடந்து போய் விட்டார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்கள் ஆறவில்லை என்பதே உண்மை.

இத்தருணத்தில் திரைப்பட கவிஞர் வாலி அவர்கள் பாபர் மசூதி இடிப்பு குறித்து எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

” நாலைந்து காலிகள் சேர்ந்து
நாற்காலிக்காக போட்ட ஆட்டம் இது

மசூதியை இடித்ததினால்
இழிவு
நபிகள் நாயகத்திற்கு அல்ல

இந்தியாவின்
ஜனநாயகத்திற்கு”

மு.தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்)

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...