நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணங்களால் நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் சொல்ல முடியாத துயரங்களுக்குள்ளாகி வருகின்ற நிலையில், அவர்களின் துன்பங்களை போக்குவதற்காக மனிதாபிமான ரீதியில் பல்வேறு விதமான உதவிகளும் பலதரப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கொலன்னாவை பிரதேசத்திலுள்ள மக்கள் விசேடமாக பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்குகின்ற சிரமங்களை போக்க கொலன்னாவை ஜமாஅத்தே இஸ்லாமியின் கிளை எழுதுபொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
அதற்கமைய இந்நிகழ்வு கடந்த 17ஆம் திகதி கொலன்னாவ ‘மங்களபாய’ வரவேற்பு மண்டபத்தில நடைபெற்றது.
மூன்று சமூகங்களையும் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 மாணவர்களுக்கு தலா ரூ. 3000 பெறுமதியான எழுதுபொருள் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இத்திட்டத்துக்கான ரூ. 1.2 மில்லியன் கிளை உறுப்பினர்கள் தங்கள் நண்பர்கள் ஊடாக திரட்டப்பட்டது.
இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக வெல்லம்பிட்டிய பரமதர்மோதோய விகாரையின் பிரதம பிக்கு வித்திகல கவிதாஜா, கொலன்னாவ ஜும்மா மஸ்ஜித் பரிபாலன சபைத் தலைவரும் ஜே.ஜே அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி அல்ஹாஜ் வை.ஐ.எம். ஹனீப், கொஹிலவத்தை ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாக குழு உறுப்பினர், அல்ஹாஜ் முதஸ்ஸிர், புத்கமுவ மஸ்ஜித் குழுவின் தலைவர் அல்ஹாஜ் நிஸாம், கொதடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவின் கிராம உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் வரவேற்புரையை கிளை ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.எம். அஹியார் வழங்க விடிகல கவிதாஜா மற்றும் அல்ஹாஜ் ஹனிப் ஆகியோர் தமது பெறுமதியான ஆலோசனைகளை வழங்கினர்.
இதேவேளை இந்நிகழ்வின் இறுதியாக கே.எம். சித்தீக் அவர்களின் நன்றியுரையோடு நிறைவுபெற்றதுடன் நிகழ்ச்சியை மௌலவி மாஹிர் (நூரி) சிறப்பாக தொகுத்து வழங்கினார்.