ஐக்கிய தேசியக் கட்சி உட்பட 15 அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் தேர்தலில் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் இந்தப் பேச்சுக்களுக்கு சமாந்தரமாக பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
மேலும், எதிர்வரும் வாரத்தில் பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் பாரியளவிலான கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அந்த அரசியல் கட்சிகள் நிச்சயமாக பொதுஜன பெரமுனவுடன் இணையும் எனவும் அறியமுடிகின்றது.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான 15 அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலில் அரசியல் கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு மேலதிகமாக, கடந்த வாரம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொதுஜன பெரமுனவின் பல முக்கியஸ்தர்களினால் சமகால அரசியல் நிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அமைச்சரவை திருத்தம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினருக்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.