இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த ஆண்டு முதல் மின்சார இயந்திர படகுகளை மீனவர்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் இந்த விடயத்தை முன்வைத்தார்.
சிறியளவிலான மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 86 ரூபா மட்டுமே செலவாகும் மின்கலங்களில் 100 கிலோமீற்றர் பயணிக்கக் கூடிய மின்சார மோட்டார் படகுகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மண்ணெண்ணெய் மற்றும் டீசலில் இயங்கும் படகுகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக சோலார் பேனல்கள் மற்றும் காற்றாலைகளை பொருத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக குறிப்பிட்ட நடமாடும் சேவையை அமைச்சு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.