காதிகளாக பெண்களையும் நியமிக்க நடவடிக்கை: நீதி அமைச்சர்

Date:

காதி நீதிபதிகளாக பெண்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இதற்கு தேவையான திருத்தங்களை முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம்  தொடர்பில் பிரத்தியேக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தற்போது வரையப்படுகின்ற முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் திருத்தச் சட்டமூலம் ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்திலிருந்து நியமிக்கப்பட்ட துறைசார் நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரைகளின் பிரகாரமே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் தொடர்பில் கடந்த டிசம்பர் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்த விடயத்துடன் தொடர்புடைய தரப்பின் பிரதிநிதிகள் ஆகியோரை பாராளுமன்றத்திற்கு அழைத்து கலந்துரையாடினேன்.

இச்சட்டத்தில் திருந்தங்களை மேற்கொள்ள அவர்களினால் இதன்போது அனுமதி வழங்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல், இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, பலதார திருமண விடயத்தில் தற்போதைய சூழ்நிலையில் எந்தவித மாற்றமும் கொண்டுவரப்படமாட்டாது.

அது போன்று காதி நீதிமன்ற முறையிலும் எந்த மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது. எனினும், இந்த முறைமையினை வினைத்திறனாக மேற்கொள்ள சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், காதி நீதிபதிகளாக பெண்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், காதி நீதிபதிகளின் தகமைகள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினாலேயே நிர்ணயிக்கப்படும்’ எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 1951ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து திருத்தச் சட்டத்தில் கடந்த பல தசாப்தங்களாக எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவென 2009 இல் அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால், ஓய்வுபெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

சுமார் 9 வருட கால இழுபறியின் பின்னர் இக்குழுவின் உறுப்பினர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

இதனால், சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதில் இழுபறி தோன்றியது.

நீதி அமைச்சர்களாக 2009ஆம் ஆண்டின் பின்னர் பதவி வகித்த பலரும் இச்சட்டத்தை திருத்துவதற்கான தமது ஆர்வத்தை வெளிப்படுத்திய போதிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையுடன் இதில் திருந்தங்களை மேற்கொள்ள தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...