இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்திற்கு இன்று (22) எழுத்து மூலம் சீனா அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு இந்தியா உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்கும் என சர்வதேச நாணய நிதியத்திற்கு கடந்த 16ஆம் திகதி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், சீனாவின் நிலைப்பாடு அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் திறைசேரி பிரதி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் சீன எக்சிம் வங்கியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்கும் முதல் நாடாக இந்தியா திகழ்வதாகவும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்’ குறிப்பிட்டுள்ளது.
எந்தவொரு வடிவத்திலும் கடன் நிவாரணம் வழங்குவதன் மூலம் இலங்கையின் நடுத்தர கால மற்றும் நீண்ட கால கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க இந்தியா தயாராக இருப்பதாக கடிதம் மூலம் சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.