(Dr. MHM Azhar (PhD))
அண்மையில் துருக்கி, சிரியாவில் 7.8 ரிச்டர் அளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அறிவோம்.
அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களின் அளவை இதுவரை மதிப்பிட முடியாமல் உள்ளது, ‘அனர்த்தத்தின் அளவு எமக்கு இதுவரை தெளிவாகவில்லை’ என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் மீட்பு பணிகள் இதுவரை தொடர்ந்து கொண்டே உள்ளன, அந்நாட்டின் காலநிலையும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது, வெப்பம் ‘-0’க்குக் கீழ் உள்ளது.
இன்று (15) வரை துருக்கியில் 35,418 பலி எண்ணிக்கையும் சிரியாவில் 5,000 என மொத்தமாக 41,000ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அவ்விரு நாடுகளுக்கும் உதவுவதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
அரபு நாடுகளில் முன்னெடுப்பு உச்சநிலையை அடைந்துள்ளது. சவூதி அரேபியா இவ்வனர்த்த நிவாரண முகாமைத்துவத்தை ஒரு வித்தியாசமான முறையில் கையாள்கிறது.
ஏனைய நாடுகளைப் போன்றே பாதிக்கப்பட்டவர்களது உணவுத் தேவையை நிறைவேற்றுவதற்காக ஆரம்ப கட்டமாக 35 டொன் உணவுப் பொருட்களை சுமந்த விமானம் ஒன்றை சவூதி அரேபியா சிரியாவுக்கு அனுப்பி வைத்தது.
புதன் (15) வியாழன் (16) ஆகிய இரு தினங்களிலும் இன்னும் இரண்டு விமானங்கள் செல்லத் தயார் நிலையில் இருக்கின்றன.
தரை மார்க்கமாகவும் 105 டொன் உணவு பொருட்கள் 11 பெரிய கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவின் தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கான விசேட குழு துருக்கி மற்றும் சிரியாவை சென்றடைந்து அங்குள்ள இதர குழுக்களுடன் இணைந்து சேவையை வழங்க ஆரம்பித்தது.
குறித்த குழுவினால், பல மணித்தியாலங்களாக இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்டிருந்து காப்பாற்றப்பட்ட கர்ப்பிணி தாயின் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
சவூதி அரேபியாவின் அரசும் அந்நாட்டு பிரஜைகளும் இணைந்து, நன்கொடைகளை சேகரிப்பதில் ஈடுபாடு காட்டுவது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய ஒரு செயலாக மாறியுள்ளது.
மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத்திற்கான சவூதி மன்னர் சல்மான் மையத்தினால் உருவாக்கப்பட்ட (ஸாஹிம் பிலட்போம்) எனும் அப்ளிகேஷனினூடாக சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நன்கொடைகளை சேகரிப்பதற்கான ஒரு பகுதி இணைக்கப்பட்டு, அதன் மூலமாக கோடிக்கணக்கான பணமும் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
இன்று (15) வரை 362,591,189 ரியால்கள் 1,619,981 பேரால் வழங்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் குறித்த இரண்டு நாடுகளிலும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அவ்வரசாங்கங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.