2002 குஜராத் கலவரங்களுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்!

Date:

இந்தக் கட்டுரை ‘சமரசம் ‘ஆசிரியர் தலையங்கத்தில் இருந்து ‘நியூஸ் நவ்’ வாசகர்களுக்காக பிரசுரமாகின்றது.

2002ஆம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது திட்டமிட்டு நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலை குறித்து இலண்டனிலிருந்து செயல்படும் சர்வதேச ஊடகமான பிபிசி செய்தி நிறுவனம் India: The Modi Question என்ற பெயரில் இரண்டு பகுதிகளைக் கொண்ட ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து அதன் முதல் பகுதியை ஜனவரி 17ஆம் நாளும் இரண்டாம் பகுதியை ஜனவரி 23ஆம் நாளும் வெளியிட்டது.

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021இன் விதி 16இன் கீழ் ஒன்றிய அமைச்சகம் அவசரகாலத் தணிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தி பிபிசி வெளியிட்ட இந்த ஆவணப்படத்திற்குத் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து யூடியூப் அந்தப் படத்தை நீக்கியது. அந்த இணைப்பை வெளியிட்ட 50க்கும் மேற்பட்ட ட்விட்டர் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கும் ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்து அனைத்தும் முடக்கப்பட்டன.

“இந்திய ஒன்றிய அரசின் தடை சட்ட விரோதமானது’ என்று இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet freedom foundations) உள்ளிட்ட அமைப்புகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களின் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததுடன் இத்தடை நீக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன.

இது போகிற போக்கில் எடுக்கப்பட்ட படம் அல்ல. இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் விசாரணை செய்து அளித்த அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படம்.

“2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் 59 இந்துக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.

223 பேர் காணாமல் போயினர். 2 ஆயிரத்து 500 பேர் படுகாயம் அடைந்தனர்’ என்று 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தொடங்கி, இந்தக் கலவரம் குறித்து இங்கிலாந்தில் 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த ஜேக் ஸ்ட்ரா கூறிய கருத்துகள், குஜராத் கலவரப் புகைப்படங்கள், அறிக்கைகள், தரவுகளுடன் எழுதப்பட்ட தலையங்கங்கள், கலவரத்துக்குக் காரணம் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் நேர்காணல்கள், மறுப்பவர்களின் பதிவுகள், மோடியின் பேட்டி, ஆவணக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை இந்த ஆவணப்படம் உள்ளடக்கியுள்ளது.

முதல்வராக இருந்த மோடி காவல்துறை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தார் என்பதும் கலவரம் செய்ய இந்துத்துவா தீவிரவாதிகளை அவர் ஊக்குவித்து வி.ஹெச்.பி மூலம் இந்தப் பேரழிவை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் உரிய ஆதாரங்களுடன் இந்த ஆவணப்படம் பதிவு செய்வதாகவும் குஜராத் கலவரம் ஓர் இன அழிப்புக்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டிருந்தது என்பதை அழுத்தமாக எடுத்துரைப்பதாகவும் கூறப்படுகிறது.

“குஜராத் இனக் கலவரம் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் மிக மோசமானதாக இருந்தது. 1,38,000 பேர் உள்நாட்டு அகதிகளாயினர். இஸ்லாமியர்களின் வியாபாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன.

இஸ்லாமியப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாயினர். இஸ்லாமியர்களைத் துடைத்தெறிவதை நோக்கமாகக் கொண்டு பல மாதங்களாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட குஜராத் படுகொலைகள் ஓர் இனத்தை அழித்தொழிக்கும் எல்லா அம்சங்களையும் கொண்டிருந்த இன அழிப்புக் கலவரம்’ என்பதை ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குஜராத் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் “பிரதமர் மோடி தவறு செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை’ என்று உச்சநீதிமன்றம் அந்த மனுவை ஜூன் 24ஆம் தேதி தள்ளுபடி செய்ததுடன் மனுத் தாக்கல் செய்த தீஸ்டா செதல்வாட்டை கைது செய்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த நிலை உண்மையென்றால் பிபிசியின் ஆவணப்படத்தைக் கண்டு ஏன் ஒன்றிய அரசு நடுங்க வேண்டும்? உரிய பதில், மறுப்பை வெளியிடலாமே! “ஆவணப்படத் தொடரில் எழுப்பப்பட்ட அம்சங்களுக்குப் பதிலளிக்கும் உரிமையை இந்திய அரசுக்கு நாங்கள் வழங்கினோம். இந்திய அரசு பதிலளிக்க மறுத்துவிட்டது’ என்று பிபிசி கூறுகிறது.

மோடியையோ, அவரது அரசையோ, அவரது கட்சியையோ விமர்சிக்கும் எதையும் அழிக்கும் நிலையில் ஒன்றிய அரசு உள்ளது. குஜராத் மாநில உளவுப் பிரிவு கூடுதல் காவல்துறைத் தலைவராகப் பணியாற்றிய ஆர்.பி. ஸ்ரீகுமார், காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் போன்றோரின் குரல் நசுக்கப்பட்டதைப் போன்று, பில்கீஸ் பானுவின் நீதிக்கான குரல் ஒடுக்கப்பட்டதைப் போன்று இந்த ஆவணப் படத்தையும் முடக்க நினைப்பது ஏன்?

இந்த ஆவணப்படம் மட்டுமல்ல தங்களுக்கு எதிராகக் கருத்துகளை, உண்மைகளை வெளியிடும் 78 யூடியூப் சேனல்களையும் ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.

ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் போலி வழக்குகளில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.

180 நாடுகளைத் தரவரிசைப்படுத்தும் உலகளாவிய பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில், இந்தியா கடந்த ஆண்டு 8 இடங்கள் சரிந்து 150ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இது போன்ற தடைகளை ஏற்படுத்துவதனால் நீதியைப் புதைத்து விட முடியாது. புதைக்கப்பட்ட உண்மைகள் மீண்டும் மீண்டும் எழும்.

அதிகாரத்தின் கொடுங் கைகளையும் தாண்டி உண்மை உயிர்த்தெழும். உலக அரங்கில் இந்தியாவின் கறைபடிந்த பக்கமாக நீடித்துக் கிடக்கும் குஜராத் இனப்படுகொலைக்கான நீதி கேட்டே பிபிசியின் இந்த ஆவணப்படம் கேள்வி எழுப்பியுள்ளது.

நெரிக்கப்படும் இந்தக் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்க வேண்டும். எல்லாருமாய் அதற்கான குரல் எழுப்ப வேண்டும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...