இந்திய அரசினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023 – 2024 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை இலங்கை மாணவர்கள் இதற்காக பதிவு செய்ய முடியும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் சார்பில் கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையினால் வழங்கப்படும் வழங்கும் இந்த திட்டத்தில் நேரு நினைவு புலமைப்பரிசில், மௌலானா அசாத் புலமைப்பரிசில், ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம் உள்ளிட்ட 03 திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.
பொறியியல், விஞ்ஞானம், வணிகம், பொருளாதாரம், மனித வளம் உள்ளிட்ட துறைகள் நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டத்தில் அடங்குகின்றன.
மௌலானா அசாத் புலமைப்பிரிசில் திட்டத்தின் கீழ் குறித்த பாடங்கள் தொடர்பான முதுகலை பட்டப் படிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பொறியியல், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பட்டப்படிப்பை தொடர முடியும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், பொறியியல், விஞ்ஞானம், வணிகம், பொருளாதாரம், வர்த்தகம், மனித வள /சமூக விஞ்ஞானம் மற்றும் கலை உள்ளிட்ட துறைகளில் கலாநிதி பட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் இலங்கை மாணவர்களுக்கு கிட்டியுள்ளது.