இலங்கையில் இன்று நிஸ்பு ஷஃபான் எனப்படும் ஷஃபான் 15 ஆம் நாளாகும்.
ஷஃபான் மாதம் 15ம் நாள் இரவு ‘பராஅத் இரவு’ என மக்களால் அழைக்கப்படுகிறது. அந்த இரவு பொது மக்கள் மத்தியில் அதி விசேட இரவாக கொண்டாடப்படுகிறது.
பல வகையான அமல்கள் மற்றும் இபாதத்கள் செய்வதன் மூலம் அந்த நாள் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
அந்த நாளில் விசேட துஆ பிரார்த்தனைகள், தொழுகைகள், மூன்று யாஸீன்கள், பராஅத் நோன்பு என பல்வகை அமல்கள் நாடளாவிய ரீதியில் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது.
முந்திய வருட ரமழானின் பின்னர் படிப்படியாகத் தேய்ந்து போன ஈமானையும் இபாதத்துக்களையும் புதுப்பித்துக் கொள்வதற்காக இந்த வருட ரமழானைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் இந்தத் தினத்தில் அல்குர்ஆனின் இதயமான சூரா யாசீனை மூன்று தடவைகள் ஓதி இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு மீண்டு இந்த வருட ரமழானை எதிர்கொள்வதற்கு இந்த நாளிலே தம்மைத் தயார்படுத்திக் கொள்வார்கள்.
தொழுகையைத் தவறவிட்டவர்கள் தொழப்பிடிக்கும் நாளாகவும் முன்னர் இந்த நாளை மக்கள் குறித்து வந்தனர்.
ரமழானை அடைந்து கொள்வதற்கு தம்மைத் தயார்படுத்திக் கொள்வதற்கான இந்த ஆயத்தங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கேயுரிய கலாச்சாரப் பாரம்பரியங்களுடன் சேர்த்து இந்த நாளில் அனுஷ்டிக்கப்படுகின்றன.
இரவில் வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் ஒன்று சேர்ந்து ஆயுளை நீடிக்கவும்இ பலாய் முஸீபத்துக்களில் இருந்து தம்மை பாதுகாக்கவும் பிற மனிதர்களிடம் தங்கி வாழ்வதில் இருந்து தம்மை பாதுகாக்கவும் கோரி சூறா யாசீனை ஒதி துஆ செய்து ரொட்டி போன்ற உணவுகளை பரிமாறும் பழக்கம் மிக நீண்டகாலப் பாரம்பரியமாக இலங்கையில் இருந்து வருகிறது.
இருப்பவர்களும் இல்லாதவர்களும் அன்றைய தினம் தமது வீடுகளில் சுட்ட ரொட்டிகளை சிறுவர்களின் கைகளில் கொடுத்து அண்டை வீட்டாருக்கும் உறவினருக்கும் பகிர்ந்து பள்ளிவாசலுக்கும் அனுப்பி வைக்கும் பழக்கம் இலங்கை மக்களின் பாராம்பரியங்களுடன் பிணைந்ததாக இருந்து வருகிறது.
உலகில் பல நாடுகளிலும் வாழும் சமூகங்கள் தமக்கென்று அடையாளங்களை கொண்டிருக்கின்றன. பாரசீகர்களும் மத்திய ஆசியர்களும் ஆப்கானியர்களும் மார்ச் மாதத்தில் நவ்ரூஸ் என்ற புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
துருக்கியர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஒரு வகை புடினை தயாரிக்கிறார்கள்.
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்தஆலா பெரும் வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தமைக்காக நன்றி கூரும் வகையில் அவர்கள் இந்த புடினை தயாரித்து பரிமாறுவார்கள்.
இதனை நபி நூஹின் புடின் என்று அழைப்பர். உஸ்மானிய கிலாபத்தில் சுல்தான் முஹம்மத் பாதிஹ், முராத் கான், ஸலீம் அல் அவ்வல், அப்துல் ஹமீத் ஸானி போன்ற இறைநேசர்களாகவும் இருந்த சுல்தான்களின் ஆட்சியின் போது நிஸ்புஷ் ஷஃபான் அல்லது பராஅத் உடைய இரவில் பள்ளிவாசல்களும் பள்ளிவாசல்களுக்கு வெளியேயும் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
ஸ்தான்பூல் பாதிஹ் கொன்யா இஸ்மிர் போன்ற பிரதான நகரங்களில் உள்ள வீதிகளும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பள்ளிவாசல்கள் அதிகாலை வரை திறந்திருக்கும்.
1923ம் ஆண்டில் கிலாபத் ஒழிக்கப்பட்டு முஸ்தபா கமால் அதாதுர்க் துருக்கியை குடியரசாக பிரகடனப்படுத்திய பின்னர் இந்த வழக்காறு இடைநிறுத்தப்பட்டது.
மீண்டும் இந்த முறைமை துருக்கியில் இடம்பெறுவதை இப்போது காணமுடியும். இலங்கையிலும் இவ்வாறான பாரம்பரியங்கள் அருகி வரும் நிலையில் இந்தப் பாரம்பரியங்களால் இலங்கை முஸ்லிம் சமூகம் அடைந்து வந்த நன்மைகளும் குன்றிப் போய் வருவது அவதானிக்கப்படுகிறது.
இதேவேளை ரமழானுக்கு முந்தைய மாதமான ஷஃபான் மாதம் என்பது இறைத்தூதர் அவர்களால் பெரும்பாலும் நோன்பு நோற்பதன் மூலம் புனிதப்படுத்தப்பட்ட, ரமழானுக்கு தயாராகுவதற்கான ஒரு மாதம் என்பதே அன்னாருடைய கூற்றுக்களிலும் பொன்மொழிகளிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
எனவே பாரம்பரியங்கள் என்ற பெயரால் கடைப்பிடிக்கப்படுகின்ற இத்தகைய கிரியைகளை ஒரு மார்க்க அனுஷ்டானமாக (இஃபாபத்தாக) அனுஷ்டிப்பது இறைத்தூதரின் வழிமுறைகளுக்கும் போதனைகளுக்கும் முரணானது என்ற பலமான வாதங்களை இந்நாட்களில் சமூக ஊடகஙகள் வாயிலாகவும் வேறு வழிகளிலும் முன்வைக்கப்படுவதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டும்.