சமூக ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட சிறுமிகள்,வயோதிப பெண்களுக்கான தற்காலிக இடத்தில் இயங்கிவந்த முஸ்லிம் பெண்கள் காப்பகம் காத்தான்குடியில் நிரந்தர புதிய கட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு என்பவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு சுமார் நான்கு வருடங்களாக இந்த காப்பகம் இயங்கி வந்தது.
அதற்கமைய முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் தலைவி சல்மா அமீர் ஹம்ஸா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகவும் முன்னாள் ஓமான் நாட்டிற்கான இலங்கைக்கான தூதுவர் சட்டமுதுமாணி ஓ.எல்.அமீர் அஜ்வத் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத்,
பெண்கள் ஒரு சமுதாயத்தின் அத்திவாரங்கள். தாயாகவும் தாரமாகவும் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ் உபதேசத்தின்போது மக்களே! பெண்கள் விடயத்தில் நீங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு அவர்களிடமிருந்து கிடைக்கவேண்டிய உரிமைகள் இருப்பது உண்மைதான் ஆனால் அவர்களுக்கு உங்களிடமிருந்து கிடைக்க வேண்டிய உரிமைகளும் இருக்கின்றன.
அவர்களுடன் நன்றாகவும் அன்பாகவும் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களின் பங்காளிகளும் வலுவான உதவியாளருமாவர் என்று உபதேசித்தார்கள்.
இது ஒர் அர்த்தம் நிறைந்த தூரநோக்குள்ள உபதேசமாகும். இங்கு முஸ்லிம்களே! என்று நபிகளார் விழிக்காமல் மக்களே! என்று விழித்து உலகளாவிய செய்தியொன்றைக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில் இந்த செய்தி முழு மனித சமுதாயத்திற்குமான ஒரு படிப்பினையைக் கூறுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆண்களின் பங்காளிகளான பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படாதவரை அவர்கள் நன்றாகவும் அன்பாகவும் நடத்தப்படாதவரை மனித சமுதாயம் நிலையான அபிவிருத்தியை அடைய முடியாது என்பதாகும்.
இந்த இலக்கை அடைவதற்காகத்தான், இன்று சர்வதேசரீதியில் ஐக்கிய நாடுகள் சபை நிலைபேறான வளர்ச்சி இலக்குகள் என்ற 17 இலக்குகளில் 5வது இலக்காக பெண்கள் சமத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற இலக்கை நோக்கி பல்வேறு வேலைத்திட்டங்களை உலகளாவிய ரீதியில் செயற்படுத்தி வருகிறது.
ஆனால், பெண்களுக்கு ஓர் ஆன்மா இருக்கிறதா இல்லையா என்று விவாதித்துக்கொண்டிருந்த காலத்திலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (1400 ஆண்டுகளுக்கு முன்னர்) ஆண்களுக்கு உரிமைகள் இருப்பது போல பெண்களுக்கும் உரிமைகள் உண்டு என்றும் அவர்கள் ஆண்களின் பங்காளிகள் என்றும் அறிவித்திருப்பது சமுதாயத்தில் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அத்தியாவசியத்தையும் சமுக வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.
ஆகவே, பெண்களை நல்லமுறையில் நடாத்தி அவர்களின் உரிமைகளை வழங்கி அவர்களின் நலன்களைப் பாதுகாப்பது முஸ்லிம்களின் மத ரீதியான கடமையும் சமதாய ரீதியான கடமையுமாகும்.
ஆகவே, சமுதாய ரீதியில் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் வயோதிப பெண்களைப் பாதுகாத்து பராமரித்து வலவூட்டுவதற்காக காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பெண்கள் காப்பகம் ஏனைய பிரதேசங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும்’ என்று தூதுவர் அமீர் அஜ்வத் தெரிவித்தார்.
இதேவேளை இந்த திறப்பு விழாவுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர், நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், ஆகியோர் முதன்மை அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்ததுடன் பல பிரமுகர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.