உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட இருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைபாடு தொடர்பிலான மனுவை செல்லுப்படியற்றதாக்குமாறே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமிற்காக மேன்முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட்ட நீதியரசர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் பந்துல கருணாரத்ன அறிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவினை விசாரணை செய்து தீர்ப்பினை அறிவிக்கும் வரை, அவருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடுகளை விசாரணைகளுக்கு உட்படுத்தாமல் நிறுத்தி வைக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றினால் கோட்டை நீதவான் நீதிமன்றின் நீதவானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ மரிக்கார் ஆகிய நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றும் அதனை பொருட்படுத்தாது கடமையிலிருந்து தவறியதாக அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட இருவரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டினை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம் சந்தேக நபரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் அறிவிப்பு விடுத்துள்ளது.
குறித்த அறிவிப்பு சட்டத்திற்கு முரணாக விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை செல்லுப்படியற்றதாக்குமாறும் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.