முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள சில தமிழ் அமைப்புகள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடுகளை செய்துள்ளன.
தெற்கில் உள்ள சிங்கள மக்களை வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக ஆத்திரத்தை தூண்டும் வகையில் முன்னாள் அமைச்சர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனால், தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மனரீதியான பாதிப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளன.
தமிழ் மக்களின் தலைகளை களனிக்கு கொண்டு செல்ல போவதாக முன்னாள் அமைச்சர் கூறியிருப்பதன் மூலம் அவர் தமிழ் மக்களுக்கு மறைமுகமான கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முறைப்பாடுகளில் கோரப்பட்டுள்ளன.
தமிழ் மக்களுக்கு எதிரான இந்த கருத்தால், நாட்டுக்குள் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் நாட்டுக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டத்திற்கு அமைய சிறுபான்மை மக்களை தாழ்ந்தவர்களாக கருதி அவர்களை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிட முடியாது என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.