இன நல்லுறவுக்கு அடையாளமாகத் திகழ்ந்த ஏ.ஸீ.எஸ் ஹமீத்!

Date:

இன்று (03.09.2023) சிரேஸ்ட அரசியல்வாதியும், சிந்தனையாளரும் முன்னாள் வெளியுறவு நீதி, உயர்கல்வி அமைச்சருமான கலாநிதி ஏ.ஸீ.எஸ் ஹமீத் அவர்கள் மறைந்து 24 ஆண்டுகளாகின்றன. அதனையொட்டியே இக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

ஹமீத் ஒரு சிறந்த மனிதர். இதைத் தவிர வேறு எந்த அடைமொழி கொண்டு அழைத்தாலும் அவரது தன்மைக்கு அது ஈடாகாது அன்னார் பாடசாலை ஆசிரியராக, அதிபராக, பாராளுமன்ற உறுப்பினராக, சிரேஷ்ட அரசியல்வாதிகளாக, அமைச்சராக, சமாதான முன்னோடியாக, சிந்தனையாளராக, சமூக அக்கறை கொண்டவராக, இன்னும் தேசிய சர்வதேச ரீதியில் பல்வேறு பரிமாணங்களில் அவர் கீர்த்தி பெற்று விளங்கிய போதிலும் அத்தனைக்கும் மேலாக அவரிடம் குடிகொண்டிருந்த மனிதத்துவம் காரணமாக அவரை ஒரு சிறந்த மனிதர் என்ற கோணத்திலிருந்தே  இந்த உலகம் பார்க்கிறது.

தனது பள்ளி வாழ்க்கையை சிறப்பாக நிறைவு செய்து கொண்ட இளைஞர்  ஹமீத், உலகில் உயர்ந்த பணியான கற்பித்தல் பணியை வாழ்வின் முதற் பணியாக தேர்ந்தெடுத்தார்.

கல்வியின் பெருமையை, பெறுமதியை நன்குணர்ந்த ஓர் ஆசானாக விளங்கிய இவர் கல்விக்கு வறுமை, வசதியின்மை என்பன தடையாக இருப்பதை ஒரு போதும் அங்கீகரித்ததில்லை. அத்தகைய மாணவர்களை இனம் கண்டு தேவைகளை நிறைவு செய்து அவர்களைக் கல்வியில் முன்னேற வழிவகை செய்து கொடுப்பதில் மிகவும் ஆர்வத்துடன் செயலாற்றினார்.

அறுபதுகளில் முதன் முதலாக அவர் பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட நாள் முதல் இறுதியாக அவர் சந்தித்த தேர்தல்களின்போது கூட அவரது மனிதத்துவ பண்புகளே அவரது வெற்றிக்கு அடிப்படையாக விளங்கின.

அன்று மக்கள் உள்ளங்களை ஆட்கொண்ட அம் மனிதம்தான் இன்று வரையும் கூட மக்கள் உள்ளங்களில் அவர் நினைவை நீங்கா இடம் பெறச் செய்துள்ளது.

அரசியல் மேடையில், ஆட்சிமன்றத்தில், பாடசாலை வைபவங்களில், பரிசளிப்பு விழாக்களில்,மதசார்பாக நிகழ்வுகளில், மக்கள் கூடும் மண்டபங்களில் அவர் ஆற்றும் உரைகளிலே மனிதம் தொனிக்கும். அங்கொன்று இங்கொன்று பேசுபவர் அல்லர் அவர் .

அமெரிக்க அதிபர்களோடு பேசினாலும் அரேபிய மன்னர்களோடு பேசினாலும், இஸ்ரேலியா எகூதிளோடு பேசினாலும், இத்தாலியில் பாப்பரசரோடு பேசினாலும், உண்மையைப் பேசுபவராக, உள்ளதைப் பேசுபவராக, நல்லதை பேசுபவராக நடப்பதைப் பேசுபவராக அவர் விளங்கினார். அரசியல் லாபத்துக்காக, சாட்டுக்காக, போலி சமாதானத்துக்காக வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றும் கிழக்கில் ஒன்றும், மேற்கில் ஒன்றும் பேசிப் பிழைக்கும் எண்ணம் அவருக்கிருந்ததில்லை.

அரசியல் மேடையில் மாற்றுக் கட்சியாளர்களை ஒருபோதும் அவர் சாடிப் பேசியதில்லை. இவர் “கனவான் அரசியலுக்கு இலக்கணம் வகுத்தவர்” என்ற சொற்றொடருக்கு உவமை தேடி வேறெங்கும் செல்ல வேண்டிய அவசியம் அன்று இருக்கவில்லை. உயரிய அரசியல் சிந்தாந்தங்களைப் போதித்தவர் அவர். அரசியலில் நாணயம் இருக்க வேண்டும். அரசியலுக்கு நா நயம் இருக்கவேண்டும் என்பதையும் கூட உணர்த்தியவர் அவர். நேற்றைய இன்றைய நாளைய அரசியல்வாதிகளால் பின்பற்றியொழுகத் தகுந்த அம்சங்களைக் கடைப்பிடித்த அரசியல் ஞானி அவர்.

உள்நாட்டு அரசியலிலும் உலக அரசியலிலும் முன்மாதிரியான ஒருவராகவே அவர் செயல்பட்டார். அரசியலால் தான் பாடம் கற்றதோடு தன்னிடம் மற்றவர் அரசியல் கற்கும் விதத்திலும் அவர் நடந்துகொண்டார். உள்நாட்டு விவகாரங்களை புரிந்துணர்வோடு சாதுரியமாகத் தீர்த்து வைத்தது போலவே சர்வதேச விவகாரங்களை சமாளிப்பதிலும் அவர் உலக நாடுகளுக்கு உதவினார். அவர் இன்று உயிரோடு வாழ்ந்திருந்தால் தனது கட்சி இன்று சந்தித்துள்ள அவலத்துக்கும் விடை கண்டிருப்பார்.

திசை மாறிச் சென்றிருந்த நாட்டின் வெளிவிவகாரத்துறையை தூக்கி நிறுத்தி இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்தி பெருளாதாரம் கொழிக்கவும் நாடு செழிக்கவும் வகை செய்தவரும் இந்த  ஹமீத் தான். சாது வாகவே நடந்து கொண்டவர். இதனால் அரசியல் பேதம் பாராது மாற்றுக் கட்சியினரும் அவர்மீது மதிப்புக் கொண்டனர்.

இனம்,மதம், மொழி, அரசியல் என்ற பாகுபாடுகளை ஒதுக்கியே செயல்பட்ட இவர் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என்ற வேறுபாடு களையும் வேரோடு களைந்தே பணியாற்றினார். சகலரும் மனிதரே என்ற கொள்கையே அவர் உள்ளத்தில் படர்ந்திருந்தது.

பாராட்டுகளை விடவும் விமர்சனங்களை விரும்பியேற்கும் ஒரு தலைவராக அவர் திகழ்ந்தார். ஊடகவியலாளர்களைக் கண்டால் கடைக் கண்ணால் நோக்கும் அரசியல்வாதிகள் மத்தியிலே பத்திரிகையாளர்களைக் கண்டு பதுங்கி வாழாது அவர்களை உறவுகளாக மதித்து கெளரவப்படுத்தும் பெருந்தன்மை யாளராகவும் ஹமீத் விளங்கினார்.

எனது ஊடகத்துறை ஈடுபாட்டின் கர்த்தாவாக, வழிகாட்டியாக விளங்கியவரும் இன்னாரே .

சமாதானதுக்காக தன்னையே இழக்க தயங்காது துப்பாக்கிக் குண்டுகளுக்கு மத்தியிலும் சமாதான தூது சென்றவர் இந்த ஹமீத். வடக்கின் போர்ச் சூழலில் போதும், மத்திய கிழக்கிலே அதி பயங்கர போராயுதங்கள் மத்தியிலும் துணிவோடு பறந்து சமாதானத்தை முன்னெடுக்க முயன்றவர் ஹமீத்.

முஸ்லிம்களுக்கு இன்றைய கால கட்டத்தில் அவசியமானது தனிக் கட்சி அல்ல தனி சக்திதான் என்பதை வலியுறுத்தியவரும்  ஹமீத் தான். முஸ்லீம்கள் சலுகைக்காக மன்றாடிய காலம் போதும் போராடியேனும் உரிமைகளைக் கேட்டுப் பெற தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சியை ஊட்டியவரும் இந்த  ஹமீத் தான்.

செப்டம்பர் மாதம் 03ம் திகதி எம்மிடமிருந்து அவர் விடைபெற்றுவிட்டார். இனிஇந்த வெற்றிடம் எவரால் எப்போது எவ்வாறு நிரப்பப்படப்போகிறது. என்பதற்கு காலத்தால் கூட பதில் சொல்ல முடியாது.

 

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...