ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஹபுஹிம் நபர்: சபையில் நளின் பண்டார

Date:

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் தனது முதல் பணியாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்கும் நடவடிக்கைகளை எடுத்தார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செனல் 4 தொலைக்காட்சியின் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆவணப்படம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்தியவர்கள், ஜோசப் பரராசிங்கத்தை கொலை செய்தவர்கள், திரிபொலி இராணுவ முகாமை வைத்துக்கொண்டு லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் சபையில் நாங்கள் உரையாட இடமளிக்காமல் தடுக்கின்றனர்.

2015 ஆம் ஆண்டு முதல் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் என்ற கொலையாளி சிறையில் இருந்தார்.

அந்த சந்தர்ப்பத்திலேயே காத்தான்குடியில் நடைபெற்ற சம்பவம் ஒன்று தொடர்பாக சஹ்ரானின் ஆட்களும் சிறைக்கு சென்றனர்.

அசத் மௌலானா கூறுவது போல் இவர்கள் இரண்டு தரப்பினரும் சிறைக்குள் இணைந்து திட்டங்களை வகுத்தனர். வண்ணாத்தவில்லுவில் அவர்களை சாலேவுக்கு அறிமுகம் செய்து சதித்திட்டங்களை உருவாக்கினர்.

இவை அனைத்தும் ஆட்சி அதிகாரத்திற்காக செய்யப்பட்ட சூழ்ச்சிகள். நாங்கள் 52 நாள் சூழ்ச்சியை பார்த்தோம். அந்த சூழ்ச்சி நீதிமன்றத்தில் தோல்வியடைந்தது.

அந்த சூழ்ச்சி தோல்வியடைந்த பின்னர் இவர்கள் திட்டம் பீ. நடைமுறைப்படுத்த வேகமான செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

52 நாள் சூழ்ச்சி தோல்வியடைந்து, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்த பின்னர் திட்டம் பீ ஆரம்பமானது. மாவனெல்லையில் புத்தர் சிலை உடைக்கப்படுகின்றது. வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் ஒன்றுக்கூடுகின்றனர்.

சஹ்ரானின் மனைவி ஹாதியா தெளிவான சாட்சியங்களை வழங்கியுள்ளார். அவர் ஹபுஹிம் என்ற நபர் பற்றி கூறியுள்ளார். ஹபுஹிம் என்ற நபர் அடிக்கடி இந்தியாவில் இருந்து தொடர்பு கொண்டுள்ளார்.

அவருடன் உரையாடும் போது அருகில் இருப்பவர்கள் வெளியேற்றபட்டனர் என ஹாதியா தெரிவித்துள்ளார். ஹபுஹிம் என்ற நபரே இந்த தாக்குதலை துரிதப்படுத்துமாறு கூறியதாக ஹாதியா கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று தெரிவுக்குழுவிற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் ஹபுஹிம் என்பது மாயை என கூறியுள்ளனர். இது குறித்து வெட்கப்படுகின்றோம். இரண்டு முக்கியமான வாக்குமூலங்கள் உள்ள அதில் ஒன்று ஹாதியாவின் வாக்குமூலம்.

இதனால் ஹபுஹிம் யார் என்று தேடாத விசாரணை குழுக்கள் பற்றி பேசி பயனில்லை. ஹபுஹிம் யார் என்பதை கண்டறியும் விசாரணை நடத்தப்பட மாட்டாது. காரணமாக அந்த நபரே பிரதான சூத்திரதாரி.

இந்த விசாரணைகளை மூடி மறைக்கவே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த உடன் தனது முதல் பணியாக விசாரணைகளை நடத்திய ஷானி அபேசேகரவை இடமாற்றம் செய்தார்.

ஷானி அபேசேகர உட்பட சி.ஐ.டியினர் விசாரணைகளை நடத்தி 100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களை பெற்றிருந்தனர்.

அதனை நிறுத்தவே ஷானி அபேசேகரவை கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து அப்புறப்படுத்தினார்.

இதனையடுத்து தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளராக சுரேஷ் சாலேவை நியமித்தார்.

இவற்றின் பின்னணியில் கொலைகளை மூடிமறைக்கும் சூழ்ச்சிகளே காணப்பட்டன எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...