கொழும்பு மாநகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதனை தடுப்பதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்த திட்டத்தினை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.
வழிவகைகள் பற்றிய குழு பாராளுமன்றத்தில் கூடிய நிலையில், இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநகரசபை மற்றும் நில மேம்பாட்டுக் கழகம் இடையில் உரிய ஒருங்கிணைப்பு இல்லாததன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், கடந்த காலங்களில் கொழும்பு மாநகரசபையின் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பெருக்கெடுக்கும் நீரைத் தடுப்பதற்கு போதுமான முகாமைத்துவமின்மை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், சமனல வாவி நீர்த்தேக்கத்தில் 30 வருடகாலமாக காணப்படும் நீர் கசிவு தொடர்பிலும் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.