அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்களின் கரங்களில் படிந்துள்ள பலஸ்தீன மக்களின் இரத்தக்கறை-லத்தீப் பாரூக்

Date:

பலஸ்தீனத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகள், அப்பாவி சிறுவர்கள், எந்தத் தீங்கும் அற்ற பருவ வயதினர், நிராயுதபாணிகளான ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரின் இரத்தம், இஸ்ரேலிய பிரதமரும் இன்றைய யுத்தக் குற்றவாளியான நெதன்யாஹுமற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களின் கரங்களில் மட்டும் படியவில்லை மாறாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்களின் கரங்களிலும் இன்று பலஸ்தீன மக்களின் இரத்தக்கறை படிந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய வம்சாவழி பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக்,பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கோலஸ் என இரத்தக்கறை படிந்த கரங்களைக் கொண்ட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்களின் இந்த வரிசை நீழுகின்றது.

அக்டோபர் 7இல் ஹமாஸ் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலை அடுத்து, பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் இன்று நடத்தி வருகின்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், காஸாவின் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப் படுகின்றமை என்பனவற்றில் இந்தத் தலைவர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதரவு என்ற பொது மொழியையே பிரயோகித்து வருகின்றனர்.

அந்த மொழிப் பிரயோகத்தின் பிரதான வாசகம் இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் உரிமை இருக்கின்றது என்பதேயாகும்.

பைடன், ரிஷி சுனாக், மக்ரோன் என ஒருவர் பின் ஒருவராக இஸ்ரேலுக்கு விஜயம் செய்து தமது ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளனர்.

பலஸ்தீன மக்கள் மீது காட்டுமிராண்டித்தனத்தை பிரயோகிக்க இஸ்ரேலுக்கு தேவையான இராணுவ, அரசியல், இராஜதந்திர மற்றும் நிதி ரீதியான ஆதரவுகளையும் அவர்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.

பலஸ்தீன அப்பாவி மக்களை இஸ்ரேல் துடிக்க துடிக்க கொன்று குவிப்பதை உலக ஊடகங்கள் காட்டிய போதிலும், அந்த மக்களின் வீடுகள், வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் என எல்லா கட்டிடங்களும் தரை மட்டமாக்கப்படுவதை ஊடகங்கள் தெளிவாகக் காட்டிய போதிலும், காஸா பிரதேசத்தின் உள் கட்டமைப்புக்கள் நாசமாக்கப்பட்டு அந்தப் பிரதேசம் ஒரு மயான பூமியாக ஆக்கப்பட்டுள்ளதை ஊடகங்கள் உணர்த்திய போதிலும், அவற்றை எல்லாம் சற்றும் கவனத்தில் கொள்ளாமல் முற்றாகப் புறக்கணித்து இஸ்ரேலுக்கான தமது பூரண ஆதரவை இந்தத் தலைவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

இஸ்ரேலின் அட்டூழியங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என
சமாதானத்தை விரும்பும் மக்கள் உலக நாடுகள் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களில்
ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் சகல தரப்பினரதும் மனச்சாட்சிகளை உசுப்பி விட்டுள்ளன. ஆனால் மேலைத்தேச நாடுகளின் தலைவர்களது இதயங்கள் மட்டும் இவற்றால் உருகவே இல்லை.

அவர்கள் குடியேற்றவாசிகளைக் கொண்ட காலணித்துவ நாடான இஸ்ரேலை தொடர்ந்தும் ஆதரிக்கின்றனர்.

இதுவரை உலகின் எந்தவொரு நாடும் வெளிப்படுத்தாத அளவு காட்டுமிராண்டித்தனத்தை இஸ்ரேல் வான் வழியாகவும் தரைவழியாகவும், கடல்
மார்க்கமாகவும் பலஸ்தீன மக்கள் மீது பிரயோகித்து வருகின்றது.

பலஸ்தீன பொது மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள், மின்சாரம், எரிபொருள் என எல்லா அடிப்படைத் தேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

அவர்களது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டதால் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் கூட அந்த மக்கள் இழந்துள்ளனர்.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து, அமெரிக்கா மத்திய
தரை கடல் பிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு தனது யுத்தக் கப்பல்களையும்
விமானங்களையும் அனுப்பி வைத்துள்ளது.

பத்தாயிரம் தொன்னுக்கும் அதிகமான இராணுவ உபகரணங்களையும் அமெரிக்கா இஸ்ரேலுககு வழங்கி உள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக 14.5 பில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கான இராணுவ நிதி உதவியாக ஒதுக்கி உள்ளது.

பதுங்கு குழிகளைத் தாக்கி அழிக்கக் கூடிய ‘பங்கர் பஸ்டர்’ எனப்படும் பாரிய அழிவை ஏற்படுத்தும் குண்டுகளையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இஸ்ரேல் தனது அட்டகாசத்தை தொடங்கி சுமார் இரண்டு மாதங்கள் அண்மித்த
நிலையில் டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி அமெரிக்க வெள்ளை மாளிகை
இஸ்ரேலுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதி செய்து ஒரு அறிக்கையை
வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பைடன் கனடா, பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ் மற்றும்
இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வழியாகத் தொடர்பு
கொண்டு, இஸ்ரேலுக்கான அவர்களின் ஆதரவை மீள் உறுதி செய்த பின் இந்த
அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கொள்கையைப் பின்பற்றி பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக்கும் மத்திய தரை கடல் பிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு தனது இராணுவத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அத்தோடு பலஸ்தீன பொது மக்கள் மீதான இன ஒழிப்புக்குத் தேவையான இராணுவ
உதவிகள் பலவற்றையும் அவர் இஸ்ரேலுக்கு வழங்கி உள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலின் செயற்பாடுகளால் சோர்வடைந்து எந்த உதவிகளும் அற்ற
நிலையில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ
கட்டரஸ் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 99வது பிரிவை அமுலுக்கு கொண்டு வந்துள்ளார்.

காஸாவில் நிச்சயமாக ‘மனித இன பேரழிவு’ இடம்பெறவுள்ளது ஐக்கிய நாடுகள்
பாதுகாப்புச் சபையை முன் கூட்டியே எச்சரிக்கும் தனது அதிகாரத்தை பயன்படுத்துவதே இந்தப் பிரிவாகும்.

இதுவரை மிக அரிதாகவே இது பயன்பாட்டுக்கு வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மனதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றை உடனடியாக அமுலுக்கு
கொண்டு வருமாறு அவர் பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ நாடுகளிடம் இதன் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த முயற்சிகள் எல்லாமே அமெரிக்க ஐரோப்பிய தலைவர்களைப் பொருத்தமட்டில்
செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல் ஆகிவிட்டன. நிலைமைகளில் இதுவரை எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.

இஸ்ரேல் இதற்கு முன்னர் புரிந்துள்ள யுத்தக் குற்றங்களைப் போலவே பலஸ்தீன மக்கள் மீதான காட்டுமிராண்டித் தனம் மேலும் தொடருகின்றது. இன்னும் அது தொடரும் என்றே எதிர்ப்பார்க்கப் படுகின்றது.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஐக்கிய நாடுகள் சபையையும், சர்வதேச நீதிமன்றத்தையும் இன்னும் பல சம்பந்தப்பட்ட அமைப்புக்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள வரைக்கும் இந்த நிலைதான் நீடிக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் எல்லாவற்றிலும் அமெரிக்கா தனது இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாட்டையே தொடர்ச்சியாக வெளிப்படுத்தி உள்ளது.

இதில் மிக அண்மைய தீர்மானமாக பாதுகாப்புச் பையில் டிசம்பர் 8ம் திகதி வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட காஸாவில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் தொடர்பான தீர்மானத்தையும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துள்ளது.

பெரும்பாலும் பாதுகாப்புச் சபையின் ஏனைய எல்லா நாடுகளும் இன்னும் பல நாடுகளும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்த நிலையிலேயே அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை அமுல் செய்ய விடாமல் தடுத்துள்ளது.

காஸாவின் தென்முனையில் உள்ள கான்யூனுஸ் பகுதியில் அந்நாஸர் ஆஸ்பத்திரி மீது
இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் எதிர்காலம் சூனியமான நிலையில் காயமடைந்தவர்கள் அச்சத்துடன் ஆஸ்பத்திரியில் தரையில் அமர்ந்திருக்கும் காட்சி
15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்புச் சபையில் இந்தத் தீர்மானம் 13க்கு1 என்ற ரீதியில் நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டன் மட்டும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தனிமையாகிப் போன அமெரிக்காவின் இந்த முடிவு அமெரிக்காவுக்கும் அதன் மேலைத்தேச நேச நாடுகள் பலவற்றுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளதையும் புலப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலே இதற்கு பிரதான காரணம்.
யுத்த நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளில் பிரான்ஸ் ஜப்பான் என்பனவும்
அடங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா இந்தத் தீர்மானத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை கை விட வேண்டும் என எகிப்து, ஜோர்தான், பலஸ்தீன அதிகார சபை, கத்தார், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வாஷிங்டனில் நிலைகொண்டு, மேற்கொண்ட எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்களிப்பு முடிந்த பிறகு தான் அவர்களுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தனி பிளிங்கனை சந்திக்கும் வாய்ப்பே கிட்டியது. காஸா மீதான தாக்குதலில் அமெரிக்காவின் நிலைப்பாடும் போக்கும் இதுதான்.

இதுவரை கிட்டத்தட்ட 18000 பேரை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. அதில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள்.

கிட்டத்தட்ட 3000 பேர் பெண்கள், காஸாவில் 70 வீதத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன.

உணவு, நீர், மின்சாரம், எரிபொருள் என எந்த அடிப்படை வசதிகளும் இன்றி மக்கள் பரதவிக்க விடப்பட்டுள்ளனர். கடந்த சுமார் இரு மாதகாலமாக குளிரான காலநிலையில் மக்கள் வீதிகளில் இரவுகளை கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் எட்டாம் திகதி வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில்
உரையாற்றிய செயலாளர் நாயகம் அந்தனியோ கட்டரஸ் “ஏற்கனவே நாம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை, லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யெமன் ஆகிய
இடங்களில் மோசமான நிகழ்வுகளைக் கண்டுள்ளோம்.

தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அச்ச நிலை மேலும் விரிவடைவதற்கு உரிய தெளிவான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இவை சர்வதேச சமாதானம் பாதுகாப்பு என்பனவற்றை பிரயோகிக்க வேண்டிய தேவைகளையும் மிகத் தெளிவாக ஏற்படுத்தி உள்ளன” என்றார்.

இஸ்ரேலின் இன ஒழிப்புக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் வழங்கி வருகின்ற இந்த
ஆதரவு உலகம் முழுவதிலும் உள்ள பத்தி எழுத்தாளர்களின் பலத்த கண்டனத்துக்கும்
ஆளாகி உள்ளது.

இஸ்ரேலிய தலைவர்களின் கரங்களில் படிந்துள்ள பலஸ்தீன மக்களின் இரத்தக்கறை அமெரிக்க மற்றும் மேற்குலக தலைவர்களின் கரங்களிலும் அதே அளவாகப் படிந்துள்ளது.

இந்த இரத்தக் கறைகளை அழித்து விடுவது அவ்வளவு எளிதானது அல்ல. அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பிய நேச அணிகளும் தான் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவையும் நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றன என்று சர்வதேச பத்தி எழுத்தாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

மெனுவல் ஹஸாஸின் என்ற பத்தி எழுத்தாளர் “மனித விழுமியங்களையும், மனித
உரிமைகள் எல்லாவற்றையும் முற்று முழுதாக மீறுகின்ற, மக்களின் ஆற்றல்கள் மீது
தனது மேலாதிக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கத்தை மட்டும் கொண்டுள்ள ஒரு காட்டுமிராண்டி அரசால் இன்று புதிய உலக ஒழுங்குமுறை என்பது ஒரு காவியமாக்கப்பட்டுள்ளது.

அந்த அரசு இனப்பாகுபாடு போக்குள்ள சட்டங்களை அமுல் செய்து வருகின்றது. வெள்ளை இனம் அல்லாத ஆங்கிலோ செக்ஸன்ஸ் மக்களை  பிரிட்டனில் வரலாற்றின் மத்திய காலப் பகுதிக்கு முந்திய  யுகத்தில் பண்டைய ஆங்கிலம் பேசிய ஒரு காலாசார குழுவினர்)) அவமானப்படுத்துவதை ஆதரிக்கும் வகையிலான ஒரு போக்கை தூண்டும் விதத்தில் அதன் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

மிகவும் கவலைக்குரிய முறையில் அமெரிக்கா தலைமையிலான இந்த ஏகாதிபத்தியத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இணைந்துள்ளன.

இதுதான் இன்று மனித விழுமியங்களை மிதித்து சகட்டுகின்றது. எல்லா விடுதலை இயக்கங்களையும் அடக்கி ஒடுக்குகின்றது. உலகளாவிய எதிர்ப்புக்களையும் அடக்குகின்றது.

அரசுகளுக்கும் இந்த மேலாதிக்கப் போக்கை எதிர்க்கின்ற மக்களுக்கும் இடையில் இன்று மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. பல்தேசிய கூட்டுத்தாபனங்கள், இராணுவ கைத்தொழில் வளாகங்கள், இலக்கு வைக்கப்பட்ட ஊடகங்கள், சியோனிஸ பிரசார அமைப்புக்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்கள் என்பன இன்று இவற்றின் அடையாளமாகத் திகழுகின்றன.

சுதந்திரமான சிந்தனை போக்குள்ள சமூகங்கள் இந்த அமைப்பு முறையின் இயல்புகளையும் அதன் இலக்குகளையும் புரிந்து வைத்துள்ளன. இவற்றோடு நேரடி மோதலில் அவை ஈடுபட்டுள்ளன.

இருப்பினும் இயல்பு நிலையைப் பாதுகாக்கவும், அடக்கப்பட்டவர்களின் பொருளாதார ஆற்றல்களை பாதுகாக்கவும் தேவையான சக்தியை அவை இழந்து நிற்கின்றன.

கடந்த 16 வருடங்களாக உலகின் மிகப் பெரிய திறந்த வெளி சிறைச்சாலையான
காஸாவின் கரையோர முனை பகுதியை, இஸ்ரேல் மிகக் கொடூரமான ஒரு சித்திரவதை கூடமாகவும், அங்கே பலஸ்தீனர்களை பல்வேறு சித்திரவதை முறைகளுக்கான பரிசோதனை உயிரினங்களாக மாற்றிய போதிலும்  மேலைத்தேச நாடுகள் இஸ்ரேலுக்கான தமது ஆதரவுகளை நிறுத்திக் கொள்ளவில்லை.

இன்றைய தாக்குதல்கள் மூலம் மேற்குக் கரைப் பகுதியையும் தன்னோடு இணைத்து,
காஸாவை தனிமை படுத்தி, இஸ்ரேலின் பாதுகாப்பக்கான ஒரு வலயமாக அதை மாற்றி முற்றுகையின் கீழ் வைத்து, கடல் கடந்த இயற்கை வாயு வளம் ஒன்றை ஏற்படுத்த “பென் கியூரியன் கால்வாய் திட்டம்” என அவர்கள் திட்டமிட்டுள்ள கோடிக்கணக்கான டொலர் அபிவிருத்தித் திட்டத்தை காஸா ஊடாக அமுல் செய்வது தான் பிரதான குறிக்கோள்.

இந்த கால்வாய் திட்டமானது அகபா வளைகுடாவை மத்தியதரை கடலோடு இணைக்கும் திட்டமாகும். எகிப்தின் சுயஸ் கால்வாய் திட்டத்தை மழுங்கடிக்கும் ஒரு போட்டித் திட்டமே இதுவாகும்” என்று மெனுவல் ஹஸாஸின் எழுதி உள்ளார்.

குறிப்பு : அகபா வளைகுடா என்பது எய்லாத் வளைகுடா எனவும் அழைக்கப்படும்
செங்கடலின் வட முனையில் உள்ள மிகப்பெரிய வளைகுடாவாகும்.

சினாய் தீப கற்பத்துக்கு கிழக்காகவும் அரேபிய தீபகற்பத்துக்கு மேற்காகவும் இது அமைந்துள்ளது.

எகிப்து, இஸ்ரேல், ஜோர்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இதை பகிர்ந்துள்ளன. பென் கியூரியன் : இஸ்ரேல் என்ற நாட்டை நிறுவிய அதன் முதலாவது பிரதம மந்திரி.

Popular

More like this
Related

மாணவ குழுக்களுக்கிடையில் முரண்பாடு: பரீட்சை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கிய தாயார்!

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை வளாகத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை...

விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக மனு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்குமாறு...

OL பரீட்சை முடியும் முன்னரே இறக்கை கட்டிய சுதந்திரப் பறவைகள்: இரண்டு மாணவிகள் மாயம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்றைய தினம் பரீட்சை...

உண்மை மற்றும் நல்லிணக்க திட்டம் இலங்கையில் செயற்படுவது அவசியம்: அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு

இலங்கையில் செயற்படும் உண்மை மற்றும் நல்லிணக்க திட்டமொன்று காணப்படுவது அவசியம் என...