3 மாதங்களாக நடைபெற்று வரும் ஹமாஸ் – இஸ்ரேல் போரில் பலஸ்தீனில் பலியானவர்களின் எண்ணிக்கை 21,672 ஆக அதிகரித்து இருக்கிறது.
பலஸ்தீனின் ஹமாஸ் படையினர் மற்றும் இஸ்ரேல் இடையே சுமார் 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அந்த நாட்டை சேர்ந்தவர்கள், அங்கிருந்த வெளிநாட்டவர்கள் என சுமார் 240 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வந்தது. 3 மாதங்களாக நடந்து வரும் இரு நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
போர் விதிகளை மீறி இஸ்ரேல் பாஸ்பரஸ் குண்டுகளை வைத்து காசாவை தாக்கியது. காசாவில் உள்ள அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள் என எந்த பகுதியையும் விட்டுவைக்காமல் அடைக்கலம் புகுந்தவர்கள், காயமடைந்தவர்கள், நோயாளிகளையும் இஸ்ரேல் தாக்கி கொன்றது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் காசா பகுதியே சின்னாப்பின்னமாகி இருக்கிறது.
அதே சமயம், ஹமாஸ் படையினர் பதுங்கி இருக்கும் சுரங்கங்களை கண்டுபிடிக்க முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது.
ஹமாசுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா, ஹூதி படைகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இடையில் கத்தார் நாட்டின் தலையீட்டால் சில நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இரு தரப்பிலிருந்தும் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது போர் நிறுத்தம் முடிவடைந்து மீண்டும் இரு தரப்பிலும் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ஹமாஸ் படை பிடித்துச் சென்ற 240 பிணைக் கைதிகளில் இதுவரை 110 பேரை விடுவித்து இருக்கிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் மட்டும் 21,672 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 8,800 பேர் குழந்தைகள். 6,300 பேர் பெண்கள். 56,165 பேர் படுகாயமடைந்து இருக்கிறார்கள். படுகாயம் அடைந்தவர்களில் 8,663 குழந்தைகள், 6,327 பெண்கள் காயமடைந்து உள்ளனர்.
மேற்கு பேங்க் பகுதியில் 83 குழந்தைகள் உட்பட 319 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். 3,800 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். இஸ்ரேல் தரப்பில் பலி எண்ணிக்கை 1,405 ஆக அதிகரித்து உள்ளது.
அதேபோல் காசாவில் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 13 ஆயிரம் வீடுகள் தகர்க்கப்படும், சேதமடைந்து உள்ளன. 352 கல்வி நிறுவனங்களும் சேதமடைந்து உள்ளன.
காசாவில் இருக்கும் 35 மருத்துவமனையில் 26 மருத்துவமனையின் இயக்கம் தடைபட்டு இருக்கிறது. 102 ஆம்புலன்ஸ்கள் பழுதாகி உள்ளன. இஸ்ரேல் தாக்குதல் காரணமாக 203 வழிபாட்டுத் தளங்கள் சேதமடைந்து இருக்கின்றன.