மார்க்கப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த முஹம்மத் ஆசிரியர்; ஒரு யுக புருஷர் மறைந்தார்!

Date:

காலியைச் சேர்ந்த பிரபல ஆசிரியர் முஹம்மத் அவர்கள் காலமானார். அவரது மறைவையொட்டி பல தரப்பினரும் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியராக, அதிபராக, நலன்விரும்பியாக, ஊரின் மூத்த கல்விமானாக அறியப்படுகின்ற முஹம்மத்  ஆசிரியர் அவர்களின் மறைவையொட்டி இந்த ஆக்கத்தை தருகின்றோம்.

காலி ஹிரிம்புர கிராமத்தின் ஒரு பொக்கிஷம் என்றே அவரைக் கூற வேண்டும்.
ஒரு ஆசிரியராக, அதிபராக, நலன்விரும்பியாக, ஊரின் மூத்த கல்விமானாக, பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினராக இப்படி அவரது சமூகநலன்சார் நடிபங்குகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இவை அனைத்தும் அவருக்கு ஈருலகிலும் நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும் என்றிருக்க அவர் தனக்கென்றே நன்மைக்கான பிரத்தியேக வாயில் ஒன்றையும் ஏற்படுத்திக் கொண்டார்.

அது தான் மத்ரஸாவில் கற்பிக்கும் பணி. அல்லாஹ்வின் மார்க்கத்தை கற்று அதனை போதிப்பவர்களுக்கான தனது பணியை தனது மறு உலக வாழ்வின் விமோசனத்துக்காகன வழியாக அவர் கருதினார்.

கிட்டத்தட்ட 39 வருடங்கள் அவர் மத்ரஸாவில் கல்விப் பணி ஆற்றினார். காலி பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யாவில்  உஸ்தாத்மார்களுடன் கைகோர்த்த அவர் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியை அதே உஸ்தாத்மார்கள் ஆரம்பிக்கும் போதும் கூடவே இருந்து இன்று வரைக்கும் கல்வி போதித்தார்.

கிழமையில் 4 நாட்கள் எமக்கு தமிழ் பாடம் நடக்கும். மிகவும் அழகாக அனுபவ ரீதியாக பாடம் நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே. ஒருநாளும்  மனம் நோக பேசியது கிடையாது, அடித்தது கிடையாது.

அவரிடம் காணப்பட்ட தமிழ், சிங்கள மொழிப்புலமையை எமக்கு ஊட்டுவதில் அவர் பொறுப்புடன் முன் நின்றார்.

அவர் செவிமடுக்கும் குத்பாக்களில் காணும் தமிழ் வலுக்களை எம்மிடம் வந்து சுட்டிக் காட்டி நாம் அதுபோன்ற பிழைகளை ஒருபோதும் விட்டு விடக் கூடாது என்று அடிக்கடி உபதேசம் செய்வார்.

இன்று அப்பாஸிகளால் நடாத்தப்படும் ஒவ்வொரு மார்க்க உபதேசங்களின் நன்மைகளிலும் அவரரையும் ஒரு பங்குதாரராக அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

மத்ரஸாவுக்கு வெளியே எங்கு கண்டாலும் எம்மோடு பேசி சுகம் விசாரிப்பார். ஏனெனில் நாம் வெளியில் செல்வது பெரும்பாலும் வைத்தியத் தேவைகளுக்கே.

அவரது சுகம் விசாரிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு தரவில்லை என்பது தான் கவலை. ரமழானுக்கு ஒருசில நாட்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டார்.

அவரது வீடு கிட்டத்தட்ட இப்னு அப்பாஸ் மாணவர்களின் சொந்த வீடு போன்று தான். தூரப்பிரதேச மாணவர்களது பெற்றோர் உரிமையுடன் அங்கு வந்து தங்கிச் செல்வார்கள்.

அவர்களை வரவேற்று உபசரிப்பதென்பது அவர் ஆர்வமாகச் செய்த ஒரு சேவை. ஏன் எம்மைக் கூட அவரது வீட்டுக்கு அழைத்து விருந்தளிப்பார்.

க.பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்காக மத்ரஸாவில் இருந்த நேரம், மத்ரஸா இறுதிப் பரீட்சையை முடித்து கல்லூரி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் என பொதுவாக எல்லா வகுப்பு மாணவர்களும் அவரது வீட்டு விருந்துக்கு சென்றிருப்பர்.

மத்ரஸாவின் கல்வி வரலாற்றில் தமிழ் பாடம் என்பது ஒரு போதும் மத்ரஸா நிர்வாகத்துக்கு மனநிறைவை குறைக்கவில்லை. அது பாடவேளைகளிலும் தான். பெறுபேறுகளிலும் தான். கடமை ரீதியான பணிக்கும் உணர்வுரீதியான பணிக்கும் அதுதான் வித்தியாசம்.

ஆம் இப்னு அப்பாஸ் என்பது அவரது உணர்வுகளில் ஒன்று. மத்ரஸாவில் நடக்கும் விவாதம், அறிவுக் களஞ்சியப் போட்டி, மாணவர் மன்றம் என இன்னும் பல இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் அவரது மெச்சத்தக்க பங்களிப்பு என்றும் இருக்கும்.

இன்று அவர் எமக்கு மத்தியில் இல்லை. ஆனால் அவர் கற்பித்த தமிழ் இருக்கிறது. அதனுடன் சேர்த்து ஊட்டிய மென்மை, இரக்கம் போன்ற மனிதாபிமான குணநலன்கள் இருக்கின்றன. அவை அவரின் கப்ருக்கும் நன்மையாகப் போய்ச் சேர எனது பிரார்த்தனைகள்.

ஒரு மனிதனின் மரணத்துக்குப் பின்னும் அவனுக்கு பிரயோசனம் தரும் பயனுள்ள கல்வியை அவர் எமக்கு தந்து விட்டு சென்றிருக்கிறார். அந்தப் பயனுள்ள கல்வியை பயன்படுத்தி சமூகத்துக்கு பயனளிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் எமக்கு தந்திருக்கிறான்.

அவருக்கான பாக்கியம் இங்கு பன்மடங்காகிறது. அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொண்டு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் நுழையச் செய்வானாக.

ஷாகிர் (அப்பாஸி)

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...