முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பல்லேகலையில் உள்ள தும்பர சிறையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கருகில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்றது தொடர்பாக தென்னகோன் உட்பட எட்டு பேருக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பெப்ரவரி 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் தேசபந்து தென்னகோன் கடந்த 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதனைத் தொடர்ந்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த (20) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.