சவூதி அரேபியாவின் மதீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் மெக்காவில் இருந்து மதீனாவிற்கு பலர் பயணிகள் பேருந்தில் உம்ரா புனித பயணம் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சவூதி அரேபியாவின் மதீனா பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் பல இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த யாத்ரீகர்கள் முழு மருத்துவ சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
