க.பொ.த உயர்தரப் பரீட்சை இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இப்பரீட்சைக்கு இம்முறை பாடசாலை ரீதியாக 246,521 பேரும், தனிப்பட்ட ரீதியாக 94,004 பேருமென மொத்தம் 340,525 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
பரீட்சை நடைபெறுவதையிட்டு தனியார் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் இன்று (04) நள்ளிரவு 12.00 மணி முதல் தடை செய்யப்பட்டுள்ளன.பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இது வரைக் கிடைக்காதோர், இன்று (04) முதல் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நுழைந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே; மாணவர்கள் சகலரும் திடகாத்திரமான மனநிலையுடன் பரீட்சைக்குத் தோற்ற தயாராக இருப்பது அவசியம்.
வினாத்தாள்களில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த வருடத்தைப் போலவே இம்முறைக்கான வினாத்தாள்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.பரீட்சை மண்டபத்துக்கு உரிய வேளைக்கு முன்னர் சமுகமளித்து பதற்றத்தை குறைப்பது சிறந்தது.
வினாத்தாள்களை உரிய நேரத்திற்குள் நன்றாக வாசித்து, பதில்களை ஒழுங்கமைத்துக்கொண்டு பரீ்ட்சை எழுதுமாறு கோருகிறோம்.
எனவே, இந்தப் பரீட்சையின் போது பிள்ளைகள் அழுத்தம் இல்லாமல் பரீட்சையை எதிர்கொள்வதற்கு வீட்டின் சூழலையும் நன்கு தயார் செய்து, பிள்ளைகளுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல், பரீட்சைக்கு அமைதியாக முகங்கொடுக்கத் தேவையான சூழலை அமைத்துக்கொடுக்குமாறு நான் அன்பான பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்
