மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று (நவம்பர் 21) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பேரணியில் ஒலி பெருக்கி அமைப்புகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பொலிஸ் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய க.பொ.த உயர்தரப் பரீட்சை மையங்கள் பல பேரணி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும், அதிக ஒலி எழுப்பும் ஒலி அமைப்புகளைப் பயன்படுத்துவது பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறை ஏற்படுத்துமென்று குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைகள் இன்று காலை 8.30 மணி முதல் காலை 11.40 மணி வரையும், மீண்டும் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் நடத்தப்படுவதாகவும், தேர்வு செயல்முறையில் தலையிடும் எந்தவொரு செயல்பாடும் மாணவர்களை எதிர்மறையாக பாதிக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவதை நிர்வகிக்கும் தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், தேர்வு மையங்களுக்குள் நுழையும், அமர்ந்திருக்கும் அல்லது வெளியேறும் மாணவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் பொலிஸார் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பேரணி நடைபெறும் வளாகத்திற்குள் மட்டுமே ஒலி அமைப்புகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அனைத்து நிபந்தனைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் முதன்மை நோக்கம் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், உயர்தரப் பரீட்சையை தடையின்றி நடத்துவதை உறுதி செய்வதும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
