மறுவாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு நிலையங்களாக சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரிவான திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
போதைப்பொருட்கள் மற்றும் ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள தேசிய வேலைத்திட்டத்தில்,சிறைச்சாலைகளை தண்டனைக்குரிய இடமாகக் கருதாது, மறு வாழ்வளிக்கும் இடங்களாக மாற்றுவதே,இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்ற பிரிவின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சமகால அரசாங்கத்தின் கீழ், நீதி என்பது ஒரு சிலருக்கான சலுகை இல்லை.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது மக்களின் அதிகாரத்தை மக்களிடமே ஒப்படைக்கும். நாங்கள் மக்களிடமிருந்து எதையும் பறிக்கவில்லை.
சட்டத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புதல், ஊழலை ஒழித்தல் மற்றும் நேர்மை, நியாயத்தின் அடிப்படையில் கருமமாற்றுவதையே அரசாங்கம் பொறுப்பாகக் கருதுகிறது.
சமூக மற்றும் சட்டக் குறைபாடுகளைக் நீக்கி நீதியான கட்டமைப்பை உருவாக்கும் பணியில் நீதி அமைச்சும் முன்னணியில் செயற்படுகிறது. சட்டம் என்பது ஒரு தண்டனையாக இருக்கக்கூடாது.
மாறாக ஒரு புதிய தொடக்கத்தை வழங்குவதற்கான வழியாகவே இருக்க வேண்டும். சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதே அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாக நாம் கருதுகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
