பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என நீதிபதி உத்தரவிட்ட நிலையில் தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சொந்த நாட்டு மக்களையே கொலை செய்ய ஷேக் ஹசீனா உத்தரவிட்டார் எனவும், ஷேக் ஹசீனா செய்தது மனித குலத்திற்கே ஆபத்தானது என கூறிய நீதிபதி அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
பங்களாதேஷில் கடந்த ஆண்டு ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
தொடர்ந்து பங்களாதேஷ இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இதனிடையே வன்முறையில் பலர் கொல்லப்பட்டதற்கு எதிராக முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா மற்றும் அப்போதைய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மனித குலத்திற்கு எதிராக செய்த குற்றங்களுக்காக, ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்த நாட்டில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.
ஹசீனா வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதையடுத்து முன்னதாகவே தலைநகர் டாக்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
