முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் உள்ளிட்ட 4 பிரதிவாதிகள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட 3 வழக்குகள் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
கெஹெலிய ரம்புக்வெல்ல, ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமாலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணிப்பெண் நிபுணி கிரிஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 2 வழக்குகளுக்கு அமைய இந்த குற்றப்பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பிரதிவாதியையும் தலா ரூ. 50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ.10 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிபதி, அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்குமாறும் உத்தரவிட்டார்.
அதனையடுத்து, முன்விசாரணைக்காக அந்த 2 வழக்குகளையும் ஜனவரி மாதம் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் அழைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்குக்கும் இதன்போது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது, அவர்களை ரூ. 50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ. 10 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பிரதிவாதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதித்த நீதிபதி, அவர்களது கைரேகைகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
அந்த வழக்கையும் மீண்டும் முன்விசாரணைக்காக ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அழைக்குமாறும் இதன்போது உத்தரவிடப்பட்டது.
அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் முறைக்கேடாக சொத்துக்களை ஈட்டியமை தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
