பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்கள் சவூதியில் அடக்கம்

Date:

சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உயிரிழந்தோரின் உறவினா்கள் சவூதி செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சவூதி அரேபியாவின் மதினா அருகே திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த புனித யாத்ரீகா்களின் பேருந்து மீது எண்ணெய் டேங்கா் லாரி மோதிய விபத்தில் ஏற்கெனவே 40-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவா் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது. இவா், கா்நாடக மாநிலம் பிடாா் மைலூா் சிஎம்சி காலனியைச் சோ்ந்த ரஹமத் பீ (80) என அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்தில் ஒரு இந்தியா் மட்டுமே காயங்களுடன் உயிா் தப்பினாா். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சவூதி செல்லும் 50 குடும்ப உறுப்பினா்கள்: பேருந்து விபத்தில் யாத்ரீகா்கள் உடல் கருகி உயிரிழந்த நிலையில், அவா்களை அடையாளம் காட்டவும், இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் 50 போ் சவூதி அரேபியா செல்கின்றனா்.

இதுகுறித்து தெலங்கானா அரசு மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பேருந்து விபத்தில் அதில் பயணித்த யாத்ரீகா்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியது. எனவே, அவா்களை அடையாளம் காட்டவும், அவா்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் வகையிலும் குடும்ப உறுப்பினா்கள் 50 போ் சவூதி அரேபியா புறப்பட்டுள்ளனா்.

புறப்படும் முன் அவா்களுக்கு மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மரபணு ஒத்துப்போகும் பட்சத்தில்தான், அவா்களுக்கு இறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படும்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தெலங்கானா அரசு சாா்பில் மற்றும் பயணக் காப்பீடு அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்படும் என்பதோடு, சவூதி அரேபிய அரசு சாா்பிலும் வழங்கப்பட உள்ளது என்றாா்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு சவூதி அரேபியாவிலேயே இஸ்லாமிய மரபு படி இறுதிச் சடங்கை மேற்கொள்ள தெலங்கானா அரசு திங்கள்கிழமை தீா்மானித்தது. மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

முன்னதாக, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முகமது அசாருதீன் தலைமையிலான மாநில அரசுக் குழு சவூதி அரேபியா சென்றது. உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு வியாழக்கிழமை இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...