கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
ஒரு முஸ்லிம் ஆண் தனது இரண்டாவது திருமணத்தை கேரள திருமணப் பதிவு (பொது) விதிகள் 2008 இன் கீழ் பதிவு செய்ய விரும்பினால், அவரது முந்தைய திருமணம் இன்னும் நடைமுறையில் இருக்கும்போது, அவரது முதல் மனைவி அதற்கு சம்மதிக்கிறாரா இல்லையா என்பது குறித்தும் கேட்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள்.
கேரளாவில் என்ன நடந்தது?
கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமியர் நபருக்கு 44 வயதாகிறது.. திருமணமான இவர், 38 வயது பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், 2வது திருமணத்தை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். உடனே இதை எதிர்த்து கேரள உச்ச நீதிமன்றத்தை நாடினார் அவர்.
தன்னுடைய மனுவில், “இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்ய அனுமதி உள்ளதால், தன்னுடைய 2-வது திருமணத்தை பதிவு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கானது நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இஸ்லாமிய ஆண்கள் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் 2வது திருமணத்தை பதிவு செய்ய முடியாது. இரண்டாவது திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, முதல் மனைவியின் கருத்தை கேட்க வேண்டியது கட்டாயம்.
ஒருவேளை இரண்டாவது திருமணத்துக்கு முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்தால், அந்த திருமணத்தை பதிவு செய்யக்கூடாது. அடிப்படை உரிமைகள் என்பது, மத உரிமைகளைவிட முக்கியமானவை. இரண்டாவது திருமணத்தை எதிர்க்கும் பெண்களின் கருத்தையும் நாம் புறக்கணிக்க முடியாது.
இஸ்லாமிய சட்டத்தின்படி பார்த்தாலும், ஒரு ஆண் 2வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. முதல் மனைவியின் சம்மதம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை திருக்குர்ஆனோ அல்லது இஸ்லாமிய சட்டங்களோ அனுமதிக்கவில்லை.
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை சமமாக நடத்த முடிந்தால் மட்டுமே ஒருவர் அவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளன.
எனவே, ஒரு இஸ்லாமிய பெண் தன்னுடைய கணவரின் இரண்டாவது திருமணத்தில் வெறும் பார்வையாளராக அமைதியாக இருப்பதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
மேலும், மனுதாரர் தாக்கல் செய்த வழக்கில் அவரது முதல் மனைவியின் தரப்பு சேர்க்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, கணவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
