இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறை வருமானமாக 186.1 மில்லியன் அமெரிக்கன் டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான சுற்றுலாத்துறை வருமானமான 2,533.7 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.9 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19,72,957 ஆகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 4,43,622 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 1,80,592 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 1,44,308 பேர் ரஷ்யாவிலிருந்தும், 1,23,053 பேர் ஜெர்மனியிலிருந்தும், 1,15,400 பேர் சீனாவிலிருந்தும் வருகை தந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
