வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (30) மாலை இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று வென்னப்புவ லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஹெலிகொப்டர் அருகில் உள்ள ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தின்போது விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் ஹெலிகொப்டரில் இருந்துள்ளனர்.
பிரதேசவாசிகளும், பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் 4 விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திடீரென உயிரிழந்த இந்த விமானி குறித்து சமூக ஊடகங்களில் பல உருக்கமான குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
