பஹன மீடியாவின் ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ நூல்: தேசிய ஒருமைப்பாட்டுக்காக புத்திஜீவிகளின் சிந்தனையை பட்டைத் தீட்டும் மகத்தான வெளியீடு.

Date:

கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்கள் தமிழில் எழுதி வழங்கிய ‘இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு’ என்ற வரலாற்று ஆய்வு நூலின் சிங்கள மொழிபெயர்ப்பான ‘අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ’ (Abhimanawath Ithihasayaka Lankeya Muslim Lakuna) நூல் வெளியீட்டு விழா நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக விமரிசையாக நடைபெற்றது.

ருஹுனு பல்கலைக்கழக்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரபல மொழியியலாளருமான கலாநிதி தம்மிக ஜயசிங்க அவர்களால் மிக நுணுக்கமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூலானது, இலங்கை முஸ்லிம்கள் தேசத்துக்கு ஆற்றிய காத்திரமான பங்களிப்புகளை சிங்கள வாசகர்களுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாக அமைகிறது.

பஹன மீடியாவின் தலைவர் ஸெய்யித் சாலிம் ரிபாய் மௌலானா தலைமையில் நடந்த சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில் புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் கலாநிதி ரோஹித தசாநாயக அவர்கள் கலந்துகொண்டு இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்களின் வரலாறு மிக ஆழமாக தொடர்புபட்டிருப்பதை மிக விரிவாக விளக்கினார்.

இதேவேளை,  இந்நிகழ்வுடன் இணைந்ததாக ‘பஹன மீடியா’ நிறுவனத்தின் 7ஆம் ஆண்டு பூர்த்தி விழாவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய ஷுரா சபை தலைவருமான எம்.எம். சுஹைர் PC, உலமா சபை செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித், உட்பட தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு, தர்ம சக்தி அமைப்பு புத்தளம் சர்வமத அமைப்பு ஆகிய சர்வமத அமைப்புக்களின் மதத் தலைவர்களும், திணைக்கள தலைவர்கள், புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பல்லின சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் சகவாழ்வையும் ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட பஹன மீடியாவின் துனை நிறுவனமான பஹன பப்ளிகேஷன்ஸின் இந்த நூல் வெளியீடு நாட்டின் அறிவுசார் தளத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

புத்தசாசன மற்றும் மத விவகார கலாசார அமைச்சர் கலாநிதி சுனில் செனவி தனது உரையில்,  ஒரு நாட்டின் உண்மையான பலம் அதன் பன்முகத்தன்மையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தினார்.

‘இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவை பெரும்பாலும் சிங்கள மொழி மூலமான ஆவணங்களில் போதிய அளவில் பதிவு செய்யப்படவில்லை. கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்களின் இந்த முயற்சி, அந்த இடைவெளியை நிரப்புவதுடன், இனங்களுக்கிடையிலான சந்தேகங்களை நீக்கி, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசேட உரையாற்றிய பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் கலாநிதி ரோஹித தசாநாயக இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணமாகக் கருதப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.

‘முஸ்லிம்கள் வெறும் வர்த்தக சமூகமாக மட்டும் இலங்கையில் இருக்கவில்லை, அவர்கள் மன்னராட்சி காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் அரசியல் என அனைத்து துறைகளிலும் தடம் பதித்துள்ளனர். சிங்கள மொழியில் இத்தகைய ஆழமான வரலாற்றுத் தகவல்கள் வெளியிடப்படுவது எதிர்காலத் தலைமுறையினரிடையே பரஸ்பர கௌரவத்தை வளர்க்க உதவும்’ எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பின் பணிப்பாளர் திரு. மஞ்சுல கஜநாயக்க அவர்கள்  பஹன மீடியாவின் 7 ஆண்டு கால ஊடகப் பயணம் குறித்துப் பேசுகையில்,

இன்றைய சவாலான ஊடகச் சூழலில் உண்மைகளைத் தேடிச் செல்வதிலும், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்ப்பதிலும் பஹன மீடியா ஆற்றி வரும் காத்திரமான பங்களிப்பைப் பாராட்டினார். குறிப்பாக, ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்று ஆவணங்களை பெரும்பான்மைச் சமூகத்திடம் கொண்டு சேர்ப்பதற்கான இத்தகைய நூல் வெளியீட்டு முயற்சிகள், நாட்டின் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

விழாவின் இறுதி நிகழ்வாக, இந்நூலின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும் வகையிலும், பஹன மீடியாவின் ஏழாண்டு கால சாதனைகளைக் கௌரவிக்கும் வகையிலும் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின் பிரதம அதிதி புத்தசாசன மற்றும் மத விவகார கலாசார அமைச்சர் கலாநிதி சுனில் செனவி, விசேட அதிதிகள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு பஹன மீடியா நிறுவனத்தினால் விசேட நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பஹன மீடியா நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின்னால் இருந்து உழைத்த அதன் ஊழியர்களின் அர்ப்பணிப்பைக் பாராட்டி, அவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சர்வமதத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழாவை ஊடகவியலாளர்களான ஜாவித் யூசுப், லக்மினி நதீஷா மிக அழகிய முறையில் தொகுத்து வழங்கினர்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை தேசியத் தளத்தில் மீள் பதிவு செய்த திருப்தியுடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...