ஒரு வீட்டில் கணபதி ஹோமத்தின் மந்திரங்கள் ஒலிக்கிறது, மற்றுமொரு வீட்டில் புனித குர்ஆன் ஓதும் சப்தம் கேட்கிறது.
இந்தியாவின் கேரளா மாநிலத்தின் மலையாள ஊடகங்கள் நேற்று திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் உண்மையான “கேரளா ஸ்டோரி” இதுதான்.
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட கோர நிலச்சரிவில் சூரல்மலை கிராமம் முற்றிலும் மண்ணில் புதைந்தது.
தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்து, நடுத்தெருவில் நின்ற மக்களுக்குப் புகலிடம் அளிக்கும் வகையில், முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 53 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, நேற்று பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
கேரள மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பாணக்காடு சாதிக் அலி ஷிஹாப் தங்கள், தேசிய செயலாளர் குஞ்ஞாலிகுட்டி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் இந்த வீடுகள் கையளிக்கப்பட்டன.
ஜாதி, மத பேதமின்றி பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகள் இந்த வீடுகளைப் பெற்றுக்கொண்டனர்.
அவர்கள் தங்களின் மதச் சடங்குகளை முறைப்படி நடத்தி, பால்காய்ச்சி புதுவீடுகளில் குடியேறிய நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சுமார் 1100 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு வீடும், தற்கால வசதிகளுடன் மூன்று படுக்கையறைகள், விசாலமான டைனிங் ஹால் மற்றும் குடிநீர் வசதியைக் கொண்டுள்ளது. வெறும் கட்டிடமாக மட்டுமின்றி, ஒரு குடும்பம் வாழ்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முஸ்லிம் லீக் கட்சி செய்து கொடுத்துள்ளது.
கட்டில், மெத்தை, சோபா செட், நாற்காலிகள், டைனிங் டேபிள், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள், இரண்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய் மற்றும் மளிகைப் பொருட்கள் என ஸ்டோர் ரூம் வரை அனைத்தும் நிரப்பப்பட்டு வீடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க ஒவ்வொரு சிறு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துள்ள முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளின் இந்தச் செயலை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் உண்மையான அடையாளமாக வயநாட்டின் இந்த கிராமம் இன்று மாறியுள்ளது.

