33 ஆண்டுகளுக்குப் பின் அபூர்வ நிகழ்வு: அரஃபாத் நன்னாளில் புனித காபாவிற்கு நேர் உச்சியில் தோன்றும் சூரியன்!

Date:

இஸ்லாமிய நாட்காட்டியின் மிக முக்கியமான மற்றும் புனிதமான நாளான அரஃபாத் தினத்தில்  சூரியன் மக்காவிலுள்ள புனித காபாவுக்கு நேர் மேலாக உச்சி வானில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு இந்த ஆண்டு  நிகழவுள்ளது.

இந்த அபூர்வ நிகழ்வானது 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது என வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வானியலாளர்களின் கணிப்புப்படி, 2026 மே 27 ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் வேளையில் (துல்ஹஜ் மாதத்தின் 9-ஆம் நாள் 1447H) இந்த நிகழ்வு அரங்கேறவுள்ளது.

 அந்தத் துல்லியமான கணப்பொழுதில், சூரியனின் கதிர்கள் காபாவின் மீது செங்குத்தாக விழுவதால், மக்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செங்குத்தான பொருட்களின் நிழல்கள் அனைத்தும் முற்றிலும் மறைந்துவிடும்.

பொதுவாக, மக்கா நகரம் பூமத்திய ரேகைக்கு வடக்கே 21.4 டிகிரி அச்சரேகையில் அமைந்துள்ள புவியியல் இருப்பிடம் காரணமாகவும், சூரியன் ரேகைக்கும் பூமத்திய ரேகைக்கும் இடையே நகர்வதாலும், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை சூரியன் காபாவிற்கு நேர் உச்சிக்கு வருவது இயல்பான ஒன்றுதான்.

33 ஆண்டுகளுக்குப் பின்னரான அரிய நிகழ்வு

இருப்பினும், இந்த ஆண்டு இந்த வானியல் நிகழ்வு புனித ஹஜ் கடமையின் முக்கிய நாடான அரஃபாத் நன்னாளுடன் (மற்றும் பெருநாள் தினத்தை ஒட்டி) இணைந்து வருவதுதான் உலகளாவிய ரீதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1993 ஆம் ஆண்டே இத்தகையதொரு நிகழ்வு பதிவாகியிருந்தது.

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டிக்கும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட கிரிகோரியன் நாட்காட்டிக்கும் இடையே உள்ள நாட்களின் வித்தியாசமே இதற்குக் காரணமாகும்.

சந்திர சுழற்சியின் படி இந்த இரண்டு தினங்களும் மீண்டும் ஒரே நாளில் ஒன்றிணைய தோராயமாக 33 ஆண்டுகள் தேவைப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்களின் கிப்லா (தொழுகை நடத்தும் திசை) திசையை எவ்வித அதிநவீன கருவிகளுமின்றி, துல்லியமாகக் கணக்கிட இந்த தருணம் ஒரு சிறந்த அறிவியல் வாய்ப்பாக அமையும்.

வெப்பநிலை அதிகரிக்குமா? சவூதி வானிலை மையம் விளக்கம்.

சூரியன் காபாவிற்கு நேர் உச்சியில் வருவதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளுக்கு சவூதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்துப் பேசிய சவூதி வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் உசேன் அல் கஹ்தானி (Hussein Al Qahtani), “இது ஆண்டுதோறும் கண்காணிக்கப்படும் ஒரு சாதாரண இயற்கை வானியல் நிகழ்வு மட்டுமே. சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் மட்டும் வெப்பநிலை அசாதாரணமாக உயர்ந்துவிடாது. ஒரு பிராந்தியத்தின் வானிலையானது காற்றின் வேகம், ஈரப்பதம், மேகமூட்டம் மற்றும் வளிமண்டலக் காற்றின் நகர்வு போன்ற பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் எண் கணிப்பு மாதிரிகள் (Numerical Forecasting Models) மூலம் துல்லியமான வானிலை அறிக்கைகளை வழங்கி வருவதாகவும், பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ மூலங்களின் தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...