இந்தோனேசிய ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!

Date:

இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன (Sashikala Premawardhane), தனது நற்சான்றிதழ் பத்திரங்களை இந்தோனேசிய ஜனாதிபதி  பிரபோவோ சுபியாந்தோவிடம் முறைப்படி சமர்ப்பித்துள்ளார்.

ஜாகர்தாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ‘இஸ்தானா மெர்டேகா’-வில் நேற்று (ஜூன் 8) நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது இவை சமர்ப்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தூதுவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்த பின்னர், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அன்பான வாழ்த்துகளை ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவிடம் தூதுவர் சஷிகலா பிரேமவர்தன தெரிவித்தார்.

மேலும், இலங்கை மற்றும் இந்தோனேசியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

குறிப்பாக, வரும் 2027 ஆகஸ்ட் மாதத்துடன் இலங்கை – இந்தோனேசிய தூதரக உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய தாம் விரும்புவதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கைத் தூதுவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி சுபியாந்தோ, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

தூதுவர் சஷிகலா பிரேமவர்தன 28 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஒரு மூத்த இராஜதந்திரி ஆவார். இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பல்வேறு உயர்பதவிகளை அவர் வகித்துள்ளார்.

ஜாகர்தாவுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், கொழும்பிலுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றினார்.

ஜூன் 2019 முதல் செப்டம்பர் 2023 வரை சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராகப் கடமையாற்றியுள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மோதல் மற்றும் அமைதி ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும், இந்தியாவின் புனே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர். இவர் கொழும்பு பிஷப்ஸ் கல்லூரியின் பழைய மாணவி ஆவார்.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...