இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இட்டுச்செல்லும் நோக்கில், ஒட்டுமொத்த அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும் அரச அதிகாரிகளின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்குமான தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் ஆகியோரின் தலைமையில் நேற்று (03) நடைபெற்றது.
உலகளாவிய தொழில்நுட்பப் போக்குகளுக்கு ஏற்ப அரச சேவையின் செயல்திறனை அதிகரித்தல், சேவை தாமதங்களைக் குறைத்தல் மற்றும் அதிகாரிகளின் தொழில்நுட்ப அறிவை வளர்த்தல் ஆகியன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரச சேவையை நபர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறையிலிருந்து, கட்டமைப்புகளை (Systems) அடிப்படையாகக் கொண்ட நவீன சேவை வழங்கல் முறைக்கு மாற்றியமைக்க வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, சிரேஷ்ட அதிகாரிகளின் தொழில்நுட்ப பயத்தை (Tech-phobia) குறைத்து, அவர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதும், சைபர் பாதுகாப்பு (Cybersecurity) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இவ்வேலைத்திட்டத்தின் முன்னுரிமைப் பணியாக அமைந்துள்ளது.
இலட்சக்கணக்கான அரச ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக மின்-கற்றல் (e-learning) முறையொன்றைப் பயன்படுத்துவதற்கும், கைபேசிகள் ஊடாக அணுகக்கூடிய குறுகிய வீடியோ பாடநெறிகள் மூலம் ‘மைக்ரோ-கற்றல்’ (Micro-learning) முறையை அறிமுகப்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் எழுத்தறிவுப் பாடநெறிகளைப் பூர்த்தி செய்வதை, அரச அதிகாரிகளின் வருடாந்த பணிமதிப்பீடு (Performance Evaluation) மற்றும் பதவியுயர்வுகளுக்கான கட்டாயத் தேவையாக மாற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளின் கணினி ஆய்வகங்களை மாலை வேளையில் பயிற்சி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கும், கேமிஃபிகேஷன் (Gamification – விளையாட்டுகளினூடான கற்றல்) முறைகள் மற்றும் டிஜிட்டல் கையொப்பத்துடன்கூடிய சான்றிதழ்களை அறிமுகப்படுத்துவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
இவ்வேலைத்திட்டமானது தற்போது சேவையிலுள்ள அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தல், புதிய நியமனங்களுக்கு டிஜிட்டல் தகைமைகளைக் கட்டாயமாக்குதல் மற்றும் பாடசாலை, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்தல் ஆகிய முத்திறத் திட்டத்தின் (Three-fold plan) கீழ் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, சைபர் பாதுகாப்பு குறித்த குறுகிய விழிப்புணர்வுப் பாடநெறியொன்றும், அரச அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ மின்னஞ்சல் (Official Email) மற்றும் கூட்டுப்பணி கருவிகளைப் (Collaboration tools) பயன்படுத்துவது குறித்த நடைமுறைப் பயிற்சியும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
