துனிசியாவில் அதிரடித் தீர்ப்பு: 85 வயது ராஷித் அல்-கன்னூச்சிக்கு ஆயுள் தண்டனை!

Date:

துனிசியாவின் முன்னணி எதிர்க்கட்சியான ‘என்னஹ்தா’ (Ennahda) இயக்கத்தின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான ரஷீத் கன்னூச்சிக்கு (Rached Ghannouchi) நீதிமன்றம் அதிரடியாக ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

84 வயதான அவருக்கு ஆயுள் தண்டனையுடன் சேர்த்து மேலும் 30 ஆண்டுகள் கூடுதல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

என்னஹ்தா இயக்கத்தின் “ரகசிய பாதுகாப்பு அமைப்பு”  தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணியும் குற்றச்சாட்டுகளும்

கடந்த 2013-ஆம் ஆண்டில் துனிசியாவின் இடதுசாரி அரசியல் தலைவர்களான சுக்ரி பெலாயித் மற்றும் முகமது பிராஹிமி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலையின் பின்னணியில் என்னஹ்தா கட்சியின் ரகசிய உளவு அமைப்பு செயல்பட்டதாகவும், அவர்கள் அரசு நிறுவனங்களுக்குள் ஊடுருவி உளவு பார்த்ததாகவும் அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த துனிஸ் முதல்நிலை நீதிமன்றத்தின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு, ரஷீத் கன்னூச்சி மற்றும் அவரது ஆதரவாளர்கள் “பயங்கரவாதக் கூட்டணியை உருவாக்கியது” மற்றும் அரசுப் பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி இந்த கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.

தீர்ப்பின் முக்கிய விவரங்கள்:

ரஷீத் கன்னூச்சிக்கு ஆயுள் தண்டனை + 30 ஆண்டுகள் சிறை. சிறைத்தண்டனை காலத்திற்குப் பிறகு 5 ஆண்டுகள் அரசு நிர்வாகக் கண்காணிப்பில்வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் பிரதமர் அலி லாரயேத்துக்கு 42 ஆண்டுகள் சிறையும், முன்னாள் பாதுகாப்பு அதிகாரி முஸ்தபா கதெருக்கு ஆயுள் தண்டனையுடன் 96 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

என்னஹ்தா கட்சியின் மறுப்பு:

இந்த தீர்ப்பு சர்வதேச அளவிலும், துனிசிய அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பை முற்றிலுமாக நிராகரித்துள்ள என்னஹ்தா இயக்கம், இது நீதியை குழிதோண்டி புதைக்கும் ஒரு ஆபத்தான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என சாடியுள்ளது.

இந்த வழக்கு எந்தவொரு பாதுகாப்பு அல்லது நீதித்துறை அமைப்புகளால் தொடங்கப்பட்டது அல்ல. மாறாக, மாற்று அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே தொடங்கப்பட்டது. தேர்தல்களின் போது தங்களை சிதைப்பதற்காக, அரசியல் எதிரிகளால் உருவாக்கப்பட்ட ஒரு சித்தாந்த மோதலே தவிர இதில் சட்டப்பூர்வமான குற்றம் எதுவும் இல்லை.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் முஸ்தபா கிதர், கடந்த 2013-ல் என்னஹ்தா கட்சி ஆட்சியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டு, 8 ஆண்டுகள் முழுமையாக சிறைத்தண்டனை அனுபவித்து விடுபட்டவர் ஆவார். அப்போதே இந்த வழக்கிற்கும், என்னஹ்தா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது. அவ்வாறிருக்க, தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது எதிரிகளை ஒடுக்குவதற்காக இந்த வழக்கை மீண்டும் தூக்கியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு துனிசியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்குப் பிறகு, நீதித்துறையைக் கைப்பற்றிய தற்போதைய அரசு, அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்காகவே இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளது. அரசியல் படுகொலைகளில் என்னாப்தா கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்த பிறகும், இந்த புதிய நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கை வெளிப்படையாகவும், ஊடகங்களின் முன்னிலையிலும் நடத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், நீதிமன்றம் அதை நிராகரித்து, மூடிய அறைக்குள் ரகசியமாக விசாரணையை நடத்தியுள்ளது. இது நியாயமான விசாரணைக்கான குறைந்தபட்ச தகுதியைக் கூட கொண்டிருக்கவில்லை.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற முதற்கட்ட விசாரணைகளில் தலைவர் ரஷீத் அல்-கனூஷியின் பெயர் எங்கும் இடம் பெறவில்லை. ஆனால், துனிசிய நீதி அமைச்சகத்தின் நேரடி உத்தரவின் பேரில், அரசியல் காரணங்களுக்காகவே அவரது பெயர் இந்த வழக்கில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டது.

என்னஹ்தா இயக்கத்தின் மீது தீவிர எதிர்ப்பைக் கொண்ட, ‘அன்சார் அல்-ஷரியா’ அமைப்பைச் சேர்ந்த கைதிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு பொது மன்னிப்பு கிடைக்கும் என்ற பேராசையிலேயே அவர்கள் இவ்வாறு பொய் சாட்சியம் அளித்துள்ளனர்.

வழக்கறிஞர்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்கள், குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் இருந்த அனைத்து பொருட்களும் 2013 லேயே உள்துறை அமைச்சகத்திடம் முறையாக ஒப்படைக்கப்பட்டுவிட்டதை நிரூபிக்கின்றன. “ரகசிய அறை” என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்பதை நீதிமன்றம் அறிந்திருந்தும் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தற்போது குற்றம் சாட்டும் வழக்கறிஞர்களில் ஒருவரே, கடந்த 2018 ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அரசியல் படுகொலைகளுக்கும் என்னாப்தா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இறுதி நீதிமன்ற தீர்ப்புகளும் அதை உறுதி செய்துள்ளன.

தங்களது தலைவர் ரஷீத் அல்-கனூஷி மற்றும் இதர தலைவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை கட்சி கடுமையாக கண்டிக்கிறது. இது துனிசிய நீதித்துறை வரலாற்றில் ஒரு கறையாக நிலைத்திருக்கும்.

இந்த அநீதியான விசாரணைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

2023 முதல் சிறையில் இருக்கும் கன்னூச்சியின் உடல்நிலை தற்போது மோசமடைந்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...