இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர் (ஹஸனி) தொகுத்து எழுதியுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ என்ற நூல் வெளியீட்டு மாநாடு நாளை (01) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு – 07 இலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெறவுள்ளது.
காலி அலீய்யா அரபுக் கல்லூரியின் பணிப்பாளரும், காலி மாவட்ட உலமா சபைத் தலைவருமான கலீபதுல் குலபா மௌலவி முஹம்மத் ஸுஹ்ர் (பாரி) இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கவுள்ளார்.
தென் இந்தியாவின் முன்னணி இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் டாக்டர் ஸதீதுத்தீன் (பாகவி) நூலை வெளியிட்டு வைக்கவுள்ளார்.
அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ்ஷெய்க் இஹ்ஸானுத்தீன் (நளீமி) வரவேற்புரையை நிகழ்த்தவுள்ளார்.
இந்த மாநாட்டில் பின்வரும் மார்க்க அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் விசேட உரைகளை நிகழ்த்தவுள்ளனர்:
கலாநிதி தீன் முஹம்மத் (அல்-அஸ்ஹரி) – பேராசிரியர், ஹமாத் பின் கலீபா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம், கட்டார்.
கலாநிதி மஹ்ரூப் ஆதம்பாவா (அல்-அஸ்ஹரி) – பேராசிரியர், கட்டார் பல்கலைக்கழகம்.
மௌலவி எம். அஹ்மத் சூபி (மஹ்லரி) – முதல்வர், அஜ்வாத் அல் பாஸி அரபுக் கல்லூரி, கொழும்பு.
இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உலமாக்கள், கல்விமான்கள், அரபுக் கல்லூரி அதிபர்கள் மற்றும் சமயப் பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாவையும் ஆதாரபூர்வமான இஸ்லாமிய நூல்களையும், அஷ்அரி மரபுவழி அறிஞர்களின் விளக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
சமகாலத்தில் அகீதா தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மரபுவழி நிலைப்பாட்டை தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் விளக்கும் நோக்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது என நூலாசிரியர் அல்-ஆலிம் அஸ்மீர் (ஹஸனி) தெரிவித்தார்.
இலங்கை வாழ் முஸ்லிம் மாணவர்களுக்குச் சரியான அகீதா கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. சிறு வயதிலிருந்து தூய்மையான இஸ்லாமிய அகீதாவை மாணவர்களுக்குக் கற்பிப்பதும், எதிர்காலத்தில் தவறான சிந்தனைகள் மற்றும் வழிகேடுகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான உறுதியான அடித்தளமாக இந்த மாநாடு அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை, கடந்த சுமார் 26 ஆண்டுகளாகத் தௌஹீதின் பெயரால் உருவாக்கப்பட்ட தவறான சிந்தனைகள் பல்வேறு வழிகளில் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும் என்றும், அவை உண்மையான இஸ்லாமிய அகீதாவாகச் சித்தரிக்கப்படுவதால் எதிர்கால சந்ததியின் ஈமானும் சிந்தனையும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
