சிலாபம் மறைமாவட்டப் பேராயராகப் புதிதாகக் கடமையேற்றுள்ள கௌரவத்திற்குரிய டொன் விமலசிறி ஜயசூரிய அவர்கள் புத்தளத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு, புத்தளம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விசுத்தாராம விகாரையில் புத்தளம் மாவட்ட சர்வ மத தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலும் சந்திப்பும் நேற்று (02) காலையில் நடைபெற்றது.
புத்தளம் விசுத்தாராம விகாரையின் பிரதம மதகுரு கௌரவ சுதஸ்ஸி தேரர் அவர்களின் அனுசரணையில், புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் ஏற்பாட்டில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
புத்தளம் பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமய நல்லிணக்க மற்றும் சமாதான முயற்சிகள் தொடர்பான விபரங்களை பேராயர் அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் தெரிந்துகொண்டார்.
அத்துடன், இப்பிரதேசத்தில் சமய, சமூக நல்லிணக்கப் பணிகளின் போது ஏற்படுகின்ற சவால்கள் மற்றும் பிரச்சனைகள் பற்றிய விபரங்கள் குறித்தும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், எதிர்காலத்தில் சர்வ மதத் தலைவர்களுக்கிடையிலான புரிந்துணர்வை பலப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும் இச்சந்திப்பின் போது சினேகபூர்வமாகக் கலந்துரையாடப்பட்டது.
விகாரைக்கு வருகை தந்த பேராயர் அவர்களை, விசுத்தாராம விகாரையின் கீழ் இயங்குகின்ற முன்பள்ளி மாணவர்கள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, விகாரை வளாகத்தைச் சுற்றிப் பார்த்த பேராயர் அவர்கள், அங்கு மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த மதச் சடங்குகள் மற்றும் நற்பணிகள் குறித்துப் பார்வையிட்டு, அது தொடர்பான தகவல்களையும் பெற்றுக்கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில், விசுத்தாராம விகாரையின் சார்பில் விகாராதிபதி கௌரவ சுதஸ்ஸி தேரர் அவர்கள் பேராயர் டொன் விமலசிறி ஜயசூரிய அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.
அத்துடன், அஷ்ஷேக் அப்துல் முஜீப் அவர்களால், பன்னூலாசிரியரும் எழுத்தாளருமான கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்களால் தமிழில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட, ‘பஹன பப்ளிகேஷன்’ வெளியீடாக சிங்கள மொழியில் கலாநிதி தம்மிக ஜயசிங்க அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட “அபிமானவத் இதிகாசயக லான்கேய முஸ்லிம் லக்குன” நூலும் பேராயர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது, இப்பிரதேசத்தில் சர்வ சமயத் தலைவர்களுக்கு மத்தியில் இவ்வாறான சந்திப்புகளின் தேவையை உணர்த்தியதோடு, தொடர்ந்து சகல மதத் தலைவர்களும் இணைந்து பணியாற்றுவதற்கான ஆர்வத்தையும் உத்வேகத்தையும் தரும் நிகழ்வாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் விசுத்தாராம விகாரையின் விகாராதிபதி கௌரவ சுதஸ்ஸி தேரர், கண்ணன் குருக்கள், அஷ்ஷேக் முஜீப் சாலிஹ், மரியாதைக்குரிய அருட்தந்தை சரித் கௌசல்ய மற்றும் புத்தளம் சர்வ மத அமைப்பின் அமைப்பாளர் திருமதி முஸ்னியாவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



