உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்க்கமான நாள்: அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு!

Date:

இலங்கையில் அதிர்வலையை ஏற்படுத்திய 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் வழக்கில், இன்று ஒரு முக்கிய திருப்புமுனையாக  அரசுத் தரப்பின் (Prosecution) சாட்சிய விசாரணைகள் அனைத்தும் பிற்பகல் 12.40 மணியளவில் நிறைவடைந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தடுக்கத் தவறியமை, உளவுத்துறை எச்சரிக்கைகளைப் புறக்கணித்தமை மற்றும் தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணைகளே தற்போது முடிவுக்கு வந்துள்ளன.

கொழும்பு  மேல் நீதிமன்றத்தில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பிரதான வழக்கு விசாரணை விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணிகளை அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் நிறைவு செய்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசேட வழக்கு விசாரணையில் புலனாய்வு அதிகாரிகள், உளவுத்துறை உறுப்பினர்கள், மருத்துவர்கள் மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு, அரசுத் தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணச் சான்றுகளின் விசாரணைகள் இன்று பிற்பகல் 12.40 மணியளவில் அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்தன.

அரசுத் தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் தரப்பில் தற்காப்புச் சாட்சியங்களை அழைப்பதா அல்லது எதிர்தரப்புவாதங்களை முன்வைப்பதா என்பது குறித்த தீர்மானத்தை நீதிமன்றம் எடுக்கவுள்ளது.

முன்னதாக, வழக்கின் முதன்மைப் பிரதிவாதியான நௌஃபர் மௌலவி (Naufer Maulavi) உள்ளிட்ட முக்கிய சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் அளித்த வாக்குமூலங்கள், அச்சுறுத்தல்கள் இன்றி தன்னிச்சையாகவே வழங்கப்பட்டவை என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

269-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய இக்கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாகவும் நியாயமாகவும் நீதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதிசெய்யும் நோக்கில், சாட்சியங்கள் மற்றும் வாதங்கள் அனைத்தையும் ஆழமாக ஆய்வு செய்த பின்னரே, சிறப்பு மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) தனது வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பை வழங்கும்.

தாக்குதலில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பங்கள், கத்தோலிக்க திருச்சபை மற்றும் இலங்கை பொதுமக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நீதியை வழங்குவதில் இந்தச் சட்ட நடவடிக்கை மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

மன்னிப்பு கேட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி அரச பத்திரிகை ஊடாக பொதுமன்னிப்பு அறிவித்தலை...

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் – மழை நீடிக்கும் சாத்தியம்

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் குறைந்த...

அமெரிக்க செனட் வேட்பாளர் அப்துல் அல்-சயீத் தனக்கு வைக்கப்பட்ட ‘பொறியை’ சாதகமாக மாற்றிய தருணம்.

எதிர்பாராத ஒரு திருப்பமாக, மிச்சிகன் மாநிலத்தில் அமெரிக்க செனட் சபைக்கான(Senate) ஜனநாயகக்...

கொழும்பில் காசநோய் பரவ அதிக மக்கள் தொகையே முக்கிய காரணம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

கொழும்பு நகரில் பல வருடங்களாகக் காசநோய் பரவுவதற்கு அங்குள்ள அதிக மக்கள்...