ஓமான் சுல்தானகத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆலோசகர் பங்கஜ் கிம்ஜி (Pankaj Khimji) மற்றும் ஓமான் சுல்தானகத்தின் தூதுவர் அகமட் பின் அலி பின் சயீத் அல்ரஷிடி (Ahmed bin Ali bin Said Al Rashdi) ஆகியோர் நேற்று (12) வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவை சந்தித்தனர்.
இதன்போது இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றை மேம்படுத்துதல் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கிம்ஜி, விவசாயம் மற்றும் சக்திவளம் உள்ளிட்ட பல துறைகளில் இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கவும் ஓமான் தீவிர ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்தார்.
ஓமான் தரப்பின் ஆர்வத்தைப் பாராட்டிய அமைச்சர் சமரசிங்க, இலங்கையின் பல துறைகளில் நிலவும் பரந்த முதலீட்டு வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு படியாக, இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வாய்ப்புகள் உட்பட இலங்கையிலுள்ள தற்போதைய முதலீட்டு வாய்ப்புகளில் இணையுமாறு ஓமான் முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கும் நோக்கில், இலங்கையுடன் இருதரப்பு தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement) கைச்சாத்திடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஓமான் சுல்தானகத்தின் ஆர்வத்தை கிம்ஜி வெளிப்படுத்தினார்.
அமைச்சர் சமரசிங்க அந்த யோசனையை ஏற்றுக்கொண்டதுடன், அதுகுறித்து பரிசீலிக்கவும் உடன்பட்டார்.
பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதிலும் வர்த்தகம், முதலீடு மற்றும் வணிகக் பங்காண்மைகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வம் இச்சந்திப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
