விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

Date:

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு பரீட்சார்த்தமாக அனுப்பும் சர்வதேச முயற்சியில் இலங்கையின் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி செல்வி முஹம்மத் நிஜாம் நூரி இணையவுள்ளார்.

இதற்காக அவர் எதிர்வரும் 27ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

‘Mission ShakthiSAT – Phase II (India Programme)’ எனும் சர்வதேச STEM தலைமைத்துவம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (ISRO) விசேட பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் உலகளாவிய ரீதியில் 108 நாடுகளைச் சேர்ந்த 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 200 பெண் மாணவிகள் பங்கேற்கவுள்ளனர்.

தெரிவுசெய்யப்பட்ட மாணவிகள் இந்தியாவில் தங்கியிருந்து குறித்த பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதுடன், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும், இவர்கள் இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெறவுள்ளனர்.

இலங்கையின் முன்னணி பாடசாலைகளில் இருந்து இத்திட்டத்திற்காக 20 மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இருந்து மாணவி செல்வி முஹம்மத் நிஜாம் நூரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9 A சித்திகளைப் பெற்று, தற்போது உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.

மாணவி நூரியின் கல்வி மற்றும் திறமைச் சாதனைகள்:

  • தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2018): 164 புள்ளிகள்.

  • தேசிய கணிதத் திறமைப் போட்டி (IRO College, 2017): தேசிய மட்டச் சாம்பியன்.

  • தேசிய சிறுவர் தடகளப் போட்டி (2018, 2019): வெண்கலப் பதக்கம்.

  • மாகாண விஞ்ஞான செயன்முறைப் போட்டி (2024): இரண்டாம் இடம்.

  • மாகாண சதுரங்கப் போட்டி (2026): சாம்பியன் பட்டம்.

  • மாவட்ட ஆங்கில தினப் போட்டி (2026): முதலாம் இடம்.

  • தொழில்நுட்பத் திறன்: Joomla தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையத்தளங்களை உருவாக்கும் ஆற்றல்.

இலங்கையின் விஞ்ஞான மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கிண்ணியாவைச் சேர்ந்த இம்மாணவிக்கு இத்தகைய அரிய சர்வதேச வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகளை மேற்கொண்டு, அதற்கான முழுமையான அனுசரணையையும் வழங்கிய சர்வதேச செயற்பாட்டாளர் (மல்வானையைப் பிறப்பிடமாகவும் சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட) கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி அவர்களுக்கு, கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி சார்பாகவும் கிண்ணியா மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் இந்நிகழ்விற்கு உதவி புரிந்த அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் (நழிமி) அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள...

ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலையை உரையாற்ற சர்வதேச கவனம் தேவை: ஐ.நா. கோரிக்கை!

மியான்மர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த...

கல்வியால் மறுமலர்ச்சி பெறும் கிராமங்கள்:தெல்தோடைக்கு பெருமை சேர்த்த மூன்று இளம் மருத்துவர்கள்!

கல்வியின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில், தெல்தோடை மண்ணைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களின்...