நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இறுதி நாள் நிகழ்வுகள் ஜனாதிபதியின் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்ததை ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்.
போட்டி நிகழ்ச்சிகள், கண்காட்சி, (Open Mass Program), கௌரவிப்பு நிகழ்வுகள், முத்திரை வெளியீடு என்று மிகச் சிறப்பான ஒரு விழாவாக இந்த விழாவை நாம் அடையாளப்படுத்தலாம். நீண்ட ஒரு காலத்திற்கு பிறகு இவ்வாறான ஒரு தேசிய மீலாத் விழா நடந்திருப்பதை இந்த அரசாங்கத்தின் ஒரு வெற்றி என்று சொன்னால் பிழையாக இருக்காது.
இந்த விழாவில் நடைபெற்ற அறிவியல் இஸ்லாமிய கண்காட்சி பல்வேறு வகைகளிலே மக்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது. அந்த வகையில் அஹதியா மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிக் கூடம், இன்றைய இலங்கைச் சூழலில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் குறித்ததாக அமைந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள, தமிழ் இனங்களுக்கு மத்தியில் முஸ்லிம்களைப் பற்றியும், முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற மார்க்க நடைமுறைகள் பற்றியும் பல்வேறு சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் நிலவுகின்ற ஒரு சூழ்நிலையிலே, அந்த விஷயங்களைத் தலைப்பாக எடுத்து அவர்கள் தனியான ஒரு கூடத்தை அமைத்திருந்தார்கள்.
பலதார மணம் ஏன் தேவை என்பதைப் பற்றிய ஒரு பகுதி, அதேபோல புலாலுண்ணுதல் சம்பந்தமான விளக்கம் என்று இந்த நாட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியிலே காணப்படுகின்ற சந்தேகங்களுக்கான விளக்கத்தை, அதுவும் சிங்கள மொழியிலேயே வழங்குகின்ற ஒரு சிறந்த ஏற்பாட்டை அஹதியா மாணவர்கள் செய்திருந்தார்கள்.
உண்மையிலேயே இது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். அஹதியா என்பது வெறுமனே ஞாயிறு பாடசாலை மட்டுமல்ல, அது நம்முடைய மாணவர்களைப் பட்டை தீட்டுகின்ற, இஸ்லாத்தின் அடிப்படையிலே சிந்திப்பதற்கு அவர்களை வழிகாட்டுகின்ற ஒரு அழகிய செயல்திட்டம் என்பதற்கு இந்த கண்காட்சிக் கூடம் ஒரு சிறந்த உதாரணமாக இருந்தது.
ஓய்வுபெற்ற விங் கமாண்டர் ஷிஃபா அவர்களோடு இந்த கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டு, அந்த மாணவர்களுக்கும் அவர்களை வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
ஒட்டுமொத்தமாக இந்த கண்காட்சி பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக இருந்தாலும், எல்லாக் கூடங்களையும் முழுமையாகப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்காமல் போனது ஒரு கவலைக்குரிய விடயமாகும்.
தேசிய மீலாத் விழாவை மிக அழகாக ஒருங்கிணைத்து செயல்படுத்திய முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர், முஸ்லிம் விவகார திணைக்களம், நீர்கொழும்பு சமூகம் ஆகிய அனைவருமே உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்.

