பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக் கொண்ட ‘அத்தம’ (Attama) மரபைப் புதுப்பிக்கும் வகையில், புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ குளத்தின் முன் பகுதியைத் தூய்மைப்படுத்தும் சிறப்புத் திட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.
பழங்காலத்தில் கிராம மக்கள் தங்களுக்குள் எந்தவித சுயநலமுமின்றி, ஒருவர் விவசாயம் மற்றும் பொதுப் பணிகளுக்கு மற்றவர் தன்னார்வமாகச் சென்று உழைப்பை வழங்கும் உயரிய சமூக வழக்கமாக இந்த ‘அத்தம’ முறை காணப்பட்டது. இது சமூக ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் பொது நலனுக்காகச் செயல்படும் நற்பண்புகளை வளர்த்தெடுத்தது.
அந்நாட்களில் நிலவிய அதே கூட்டுறவு மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை புதிய வடிவில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தூய்மை, பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், குடிமக்களின் பொறுப்புணர்வை உயர்த்துதல் மற்றும் மக்கள் பங்களிப்புடன் தூய்மையான, ஒழுக்கமான மற்றும் நிலையான இலங்கையை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பிரதேச சபை தவிசாளர் அலோக பண்டார, புத்தளம் மாவட்டச் செயலாளர் இந்திக சில்வா, அரச அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

