தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் தொடர்பான மீளாய்வு மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான M.C.B.S. மொராயஸ் மற்றும் டாக்டர் பிராங்க் H. குணவர்தன ஆகியோர் முன்னிலையில் நேற்று ( 03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
1, 2 மற்றும் 4 முதல் 8 வரையிலான மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.டி.என். டில்ஹாம் ஆஜராகி சமர்ப்பணங்களை மேற்கொண்டார்.
3ஆவது மனுதாரர் சார்பில் சட்டத்தரணி றுடானி ஸாஹிருடன் சட்டத்தரணி ஜெனீப் பாஸி ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தனர்.
சர்ச்சைக்குரிய 74 பேர்ச்சஸ் காணியானது, பள்ளிவாசல் அமைப்பதற்கும் அப்பகுதி மக்களின் மத மற்றும் சமூக நலனுக்குமான பயன்பாட்டிற்காகவே சவூதி அரேபியாவைச் சேர்ந்த பாபக்கர் என்பவரால் வக்ஃப் (Wakf) சொத்தாக அர்ப்பணிக்கப்பட்டது என்றும், அதைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தவோ கையகப்படுத்தவோ முடியாது என்றும் மனுதாரர் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த வக்ஃப் சொத்தினை தனிப்பட்ட தர்ம நம்பிக்கையாக (Private Trust) மாற்றும் நோக்கில் பிரதிவாதிகள் பல்வேறு ஆவணங்களை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சவூதி பிரஜையான பாபக்கர் வழங்கியதாகக் கூறப்படும் அதிகாரப்பத்திரம் (Power of Attorney) செல்லுபடியற்றதாகவோ அல்லது புனையப்பட்ட ஆவணமாகவோ இருப்பதற்கான பலத்த சந்தேகங்கள் இருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
3ஆவது மனுதாரர் சார்பிலான மேலதிக சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக, வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி மற்றும் அக்டோபர் 04ஆம் திகதி ஆகிய இரு தினங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
