-முஹம்மத் பகீஹுத்தீன்
வெலிகமையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல நூலாசிரியரும் எழுத்தாளருமான, அனைவராலும் ‘நாளிர் ஸேர்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட மூத்த நாளேடு ஆசிரியர் கொழும்பில் காலமானார்.
தனது ஆழமான எழுத்துக்களாலும், சமூக விழிப்புணர்வு சார்ந்த நூல்களாலும் பல தலைமுறை வாசகர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
பல்வேறு நாளேடுகள் மற்றும் சஞ்சிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றி, நேர்மையான ஊடகவியலுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த அன்னாரின் மறைவு குறித்த ஓர் கட்டுரை…
நாளிர் ஸேர், மென்மையாய் வாழ்ந்த ஓர் இதயம். அவர் பேசும்போது இதழ்களில் புன்னகை விரியும். தாழ்ந்த குரலில், பணிவும் கனிவும் கலந்த வார்த்தைகளால் பேசுவார். வழிகாட்டுவார். அவரைச் சந்தித்துப் பேசும் எவருடைய மனதையும் அவரது மென்மையான அணுகுமுறையும் அன்பும் நிச்சயம் தொட்டுச் செல்லும்.
உயர்தரப் பரீட்சைக்கான இஸ்லாமிய நாகரிகம் வினாத்தாள் மீள்பார்வை வகுப்புகளை அவர் வெலிகாமத்தில் நடத்திய காலத்தில், அந்த வகுப்பில் கலந்து கற்ற மாணவர்களில் நானும் ஒருவன்.
மாணவர்கள் எழுதிய விடைகளை வகுப்பறையில் முன் வந்து வாசிக்குமாறு அவர் பணிப்பார். விடைகளைத் திருத்தும்போதும் அவரது அணுகுமுறை மிகவும் மென்மையாகவே இருக்கும். விடை சரியாக இருந்தால் பாராட்டுவார். அந்தப் பாராட்டில் வெறும் வார்த்தைகள் இருக்காது.
அதனுள் ஓர் அன்பும் அக்கறையும் இழையோடியிருக்கும. தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது கூட மாணவர்களின் மனம் புண்படாத வகையில் எடுத்துச் சொல்வார். அவரது இந்தப் பண்பு என் மனதில் ஆழமாகப் பதிந்த நினைவுகளில் ஒன்றாகும்.
அவருடன் இணைந்து பயணித்திருக்கிறேன். சில பணிகளையும் அவருடன் சேர்ந்து செய்திருக்கிறேன். அவர் எழுதிய ஆக்கங்களை விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் வாசித்திருக்கிறேன். அவருடைய முதிர்ச்சியின் விளிம்பில் நின்று, அவரிடமிருந்து கற்ற பாடங்களையும், அவர் வாழ்ந்து காட்டிய பண்பாடுகளையும் எண்ணிப் பார்க்கும்போது, கண்கள் பணிக்கின்றன. நினைவுகள் நெஞ்சை நனைக்கின்றன.
‘இது குறித்து…’ என்ற தொடரை அவர் மீள்பார்வை இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். அந்த பத்தியை முதலில் வாசிப்பதில் எனக்கு எப்போதும் ஓர் ஆர்வம் இருந்தது. அவர் எழுதுகிறார் என்பது தெரியாமலேயே, அந்த எழுத்துகளில் ஏதோ ஓர் ஈர்ப்பு இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அந்த எழுத்தின் பின்னால் இருந்த மனிதர் அவர்தான் என்பது பின்னாளில் அவருடன் உரையாடியபோதுதான் எனக்கு உறுதியானது.
1990களின் ஆரம்ப காலம். அல்குர்ஆன் விரிவுரை வகுப்புகளைப் பொது வெளியில் தொடராக நடத்துவதற்கான வாய்ப்பு எனக்கு இறையருளால் கிடைத்த காலம் அது. கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ‘ஷபாப்’ எனப் பிரபலமாக அறியப்பட்ட இடத்தில் அந்தத் தப்ஸீர் வகுப்பு நடைபெற்று வந்தது.
எனக்கு முன்னரும் பலர் அங்கு அல்குர்ஆன் விளக்க வகுப்புகளைத் தொடராக நடத்தி வந்திருந்தனர். நளீமியாவிலிருந்து வெளியாகி சிறிது காலத்திலேயே, அந்தப் பணியை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை அல்லாஹ் எனக்கு வழங்கியிருந்தான்.
அந்த வகுப்புகளில் ஒரு முக்கியமான அம்சம் இருந்தது. பாடம் நிறைவடைந்ததும் கலந்துகொண்டோர் கேள்விகள் கேட்பார்கள். சில கேள்விகள் பாடத்துடன் தொடர்புடையவையாக இருக்கும்; இன்னும் சில பொதுவான சமூக, சமயக் கேள்விகளாகவும் அமையும்.
அப்போது எனக்கு அருகில் எனது ஆசான் நாளிர் ஸேர் இருப்பார். எப்போதும் உரிய நேரத்தில் வருகை தந்து எனக்கு பக்கபலமா இருந்ததுண்டு.
‘ஸேர், நான் பாடத்தை நடத்துகிறேன். நீங்கள் தான் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்’ என்று சொல்வேன்.
உடனே ஒரு சிறுபிள்ளையைப் போலத் தலையசைத்து, கேள்விகளுக்குத் தெளிவான விளக்கங்களை வழங்கத் தொடங்கிவிடுவார்.
சமூகத் தளத்தில் எழும் பல்வேறு கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதையும், கேட்பவரின் மனநிலையைப் புரிந்துகொண்டு எவ்வாறு பதிலை அமைக்க வேண்டும் என்பதையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
அவருடனான அனுபவங்கள் ஏராளம். ஒவ்வொன்றும் இன்று நினைவுகளாக நிற்கின்றன.
மென்மையாகப் பேசினார். அன்பாகப் பழகினார். பணிவோடு வாழ்ந்தார். அறிவைப் பகிர்ந்தார். பலருக்கு வழிகாட்டியாக இருந்தார்.
மென்மையாய் வாழ்ந்த ஓர் இதயம் இன்று மரணத்தில் மௌனமானது.
அந்த மௌனம் மனதை வலிக்கச் செய்கிறது. நினைவுகள் கண்களைக் குளமாக்குகின்றன. இதயம் கனக்கிறது. நாவு மட்டும் ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ என்று உச்சரிக்கிறது.
அன்பு நடமாடிய அந்தக் கலைக்கூடம் இன்று மௌனமாகிவிட்டது. ஆனால் அவர் விட்டுச் சென்ற அன்பும், அறிவும், பணிவும், நினைவுகளும் என்றும் மௌனமாகாது.
இறைவா! நாளிர் ஸேரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு அருள்புரிந்து, மேலான சுவனச் சோலையில் நிரந்தர இடத்தை வழங்குவாயாக. அவருடைய நற்செயல்களை ஏற்றுக்கொள்வாயாக. அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதலையும் பொறுமையையும் வழங்குவாயாக. ஆமீன்.
