தனது வாழ்நாளில் தனக்கு சொல்லொணாத் துயரங்களையும் அவமானங்களையும் ஏற்படுத்தியவர்களைக்கூட மன்னித்தவர் முஹம்மது நபி.
அவரது காலத்தில் வாழ்ந்து , அவரது தோழர்களாக (ஸஹாபாக்கள்) மாறிய பலர், ஒரு காலத்தில் அவருடன் முரண்பட்டவர்கள், அவரைத் தூற்றியவர்கள், அவருக்கு எதிராக நின்றவர்கள். சிலர் அவரைக் கொலை செய்வதற்குக்கூட முயன்றவர்கள்.
இதற்கு ஒன்றோ, இரண்டோ அல்ல; நபியின் வரலாற்றில் பல நூறு சம்பவங்கள் ஆதாரங்களாக உள்ளன.
அவர்களை வெறுப்புடனோ பழிவாங்கும் மனப்பான்மையுடனோ அணுகாமல், கருணையுடனும் மன்னிப்புடனும் அணுகியதன் விளைவாகவே, தனது வாழ்நாளிலேயே அவரை நேசிக்கும் ஒரு மாபெரும் சமூகத்தை அவர் உருவாக்கி காட்டினார்.
தனக்கு மிகவும் அன்புக்குரிய சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை கொலை செய்து, அவரது உடலைச் சிதைத்து ஈரலை சப்பி துப்பியவர்களை கூட, தனக்கு முழுமையான ஆட்சி அதிகாரம் கிடைத்தபின்னரும் பழிவாங்காமல் மன்னித்தவர் முஹம்மது நபி.
இதற்கும் மேலாக ஓர் ஆட்சியாளனின் மன்னிப்புக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
இலங்கையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நபி அவர்களை அவதூறாக சமூக ஊடகத்தில் பின்னூட்டம் இட்ட அனோஜன், சவூதி அரேபிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
மேன்முறையீட்டின் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
எனினும், இந்த அதிர்ச்சியூட்டும் தகவலின் உண்மைத்தன்மை தொடர்பாக இந்த பதிவு எழுதும் வரை உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அதேபோன்று, சவூதி அரேபியாவின் அவதூறு (Blasphemy) மற்றும் இணையவழிக் குற்றங்கள் (Cyber Cimes) தொடர்பான சட்டங்கள் எவ்வாறு நடைமுறைபடுத்தப்படுகிறது என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது.
குறிப்பாக, குற்றவாளி சார்பில் தண்டனையைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் மேன்முறையீட்டின் போது, தண்டனை அதிகரிக்கச் சட்டரீதியாக வாய்ப்புள்ளதா என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.
முஹம்மது பின் சல்மான் (MBS) இன் வருகையின் பின்னர், சவூதி அரேபியாவில் கடுமையான மதக் கட்டுப்பாடுகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட பல நடைமுறைகளில் தளர்வுகள் ஏற்பட்டுள்ளன.
மார்க்க பொலிஸார் எனப் பரவலாக அறியப்படும் முதவ்வா (Muttawa) அமைப்பின் சட்ட அமுலாக்க அதிகாரங்களும் 2016ஆம் ஆண்டிலிருந்து பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றுடன், சவூதி அரேபியா தனது நாட்டில் ஏற்பட்டுவரும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார மாற்றங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் சுற்றுலா மற்றும் சர்வதேச தொடர்புகளையும் விரிவுபடுத்தி வருகிறது.
இந்தப் பின்னணியில், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிக்கும் தீவிர வலதுசாரி அமைப்பினர்களை கூட சவூதி அரேபியா தனது நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்யும் வசதியை செய்துவருகிறது.
இந்த திட்டத்தின் ஊடாக இலங்கையில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஞானசார தேரரும் சவூதிக்கு பயணம் செய்திருந்தார்.
நான் இதனை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம் சவூதி அரேபியாவின் உள்ளக அணுகுமுறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன..அந்த மாற்றங்களை வாய்ப்பாக பயன்படுத்தி அனோஜனை விடுவிக்கும் முயற்சியை ஆரம்பிக்கலாம்.
இங்கே கவனிக்க வேண்டியது அனோஜனின் வழக்கை உணர்ச்சியின் அடிப்படையில் அணுகுவதற்குப் பதிலாக, உரிய இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக மாத்திரம் அணுகினால், அவரது தண்டனையை மறுபரிசீலனை செய்யவோ அல்லது அவருக்கு மன்னிப்பு கிடைக்க செய்யவோ முடியும்.
எனவே, இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை உடனடியாக இராஜதந்திர ரீதியில் சவூதி அரசாங்கத்திடம் எடுத்துச் செல்லவதற்குரிய அழுத்தம் கொடுக்கப்படல் வேண்டும்.
அந்த முயற்சிகளுக்கு முஸ்லிம் சமூகமும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளும், அரசியல்வாதிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இது ஒரு தனிநபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியாக மட்டுமல்லாமல், சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும் இது பல புதிய கதவுகளைத் திறக்கக்கூடிய ஒரு முயற்சியாக அமையும்.
அனோஜன் ஒரு இளைஞன், அவனுக்கு ஓர் குடும்பம் இருக்கிறது..அந்த குடும்பத்திற்கு ஓர் கனவு இருக்கும். அந்த கனவிற்காகவே சவூதி அரேபியா சென்றான். அங்கிருந்து மன்னிப்புடன் அனோஜன் நாடு திரும்ப வேண்டும்.
பல தண்டனைகளைவிட ஒரு மன்னிப்பிற்கே பலம் அதிகம். அதுவே எம் மாநபி முஹம்மது அவர்கள் தனது வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக எமக்குக் கற்றுத்தந்த மிகப் பெரும் பாடம்.
(Facebook-Dilshan Mohamed)
