ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷேக் M.I. அமீர் மற்றும் சட்டத்தரணி அம்ஹர் ஷெரீப் ஆகியோர் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் காதிகள் சபையின் உறுப்பினர்களாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியான அஷ்ஷேக் M.I. அமீர், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், சம்மாந்துறை பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பதோடு, அண்மையில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
ஹெம்மாதகமவைப் பிறப்பிடமாகக் கொண்ட சட்டத்தரணி அம்ஹர் ஷெரீப், அகில இலங்கை YMMA பேரவையின் தலைவராகவும் கொழும்பு மேற்கு காதி நீதிபதியாகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட காதிகள் சபையில் அங்கம் வகித்த முஹைதீன் ஹுசைன் (வக்பு சபையின் முன்னாள் தலைவர்), சட்டத்தரணி பிஸ்ருல் அமீன் மற்றும் M.Y.M. றபீக் ஆகியோருடன், புதிதாக ஏற்பட்ட இரண்டு வெற்றிடங்களை பூர்த்தி செய்யவே இவ்விருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வருட பதவிக் காலத்தைக் கொண்ட இக்காதி சபையானது, நாட்டின் 65 காதி நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளுக்கு எதிரான மேன்முறையீடுகளை விசாரிக்கும் அதிகாரமுடையது.
இச்சபை மாதத்திற்கு நான்கு முறை கூடும் என்பதுடன், அதில் மூன்று அமர்வுகள் கொழும்பிலும் ஒரு அமர்வு கல்முனையிலும் நடைபெறும்.
