எகிப்தின் முன்னாள் தலைமை முப்தி ஷேக் அலி ஜூம்ஆவை (Sheikh Ali Gomaa) மலேசிய அரசின் புதிய ஆலோசனை கவுன்சிலில் அங்கத்தவராக நியமிப்பதற்கு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான சைஃபுதீன் அப்துல்லாஹ் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், புதிய ‘பொண்டோக் மற்றும் பாரம்பரிய ஆலோசகர்கள் சபையில்’ (Board of Advisors for Pondok and Heritage) ஷேக் அலி ஜூம்ஆவை சேர்க்கக் கூடாது என்று சைஃபுதீன் அப்துல்லாஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்திய அதிபர் முஹம்மது முர்சியைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்த இராணுவ ஜெனரல் அல்-சிசிக்கு அலி ஜூம்ஆ ஆதரவளித்தார் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு வழிவகுத்த பலப் பிரயோகத்தையும், வன்முறையையும் நியாயப்படுத்தியவர் அவர் எனக் கூறி, அவரை “தீய மற்றும் அநீதியான மார்க்க அறிஞர்” என சாடியுள்ளார்.
இஸ்லாமியக் கல்வி தொடர்பான ஆலோசனைகளை வழங்கிட அலி ஜூம்ஆவுக்குப் பதிலாக மலேசியா, இந்தோனேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல திறமையான மார்க்க அறிஞர்கள் இருப்பதாகவும் சைஃபுதீன் அப்துல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.
source- rassd.com
